தெளிவு பெறுவோம்

4 weeks ago 8

?நண்பர் ஒருவர் வெள்ளியில் கோர்த்த மாலையில் ஐயப்பன் டாலரை அணிந்து சபரிமலைக்குச் சென்று வருகிறார். வீட்டில் இருக்கும்போது ஐயப்பன் டாலரை எடுத்துவிட்டு விநாயகர் டாலரை இணைத்து அணிந்து கொள்கிறார். இது சரியா?
– பாலமுருகன், தென்காசி.

சரியே. சபரிமலைக்கு விரதம் இருக்கும்போது அணிந்துகொள்ளும் மாலையை, சபரிமலை யாத்திரை முடிந்ததும் கழற்றி தனியாக வைத்துவிட வேண்டும் என்ற விதி ஏதும் இல்லை. மாலை அணிவது என்பது நம்மை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்காக. நாம் விரதம் மேற்கொண்டிருக்கிறோம் என்பதை அவ்வப்போது நமக்கு நினைவூட்டுவதற்காக. ஐயப்பனின் உருவம் கொண்ட முத்திரையை மாலையில் கோர்த்து அணியும்போது, மனதிற்குள் ஒருவித வைராக்கியம் வந்து சேர்ந்து விடுகிறது. குளிர்ந்த நீரில் குளிப்பது, கோபத்தைக் கட்டுப்படுத்துவது என்று ஐம்புலன்களையும் அடக்கி இறை சிந்தனையோடு இருக்க நாம் அணிந்துகொள்ளும் மாலை, துணை நிற்கிறது. வீட்டில் இருக்கும்போது அதே மாலையில் ஐயப்பனுக்கு பதிலாக விநாயகர், முருகன், அம்பாள் என அவரவர் தங்களுடைய இஷ்ட தெய்வத்தின் உருவம் பதித்த முத்திரையை அதே மாலையில் கோர்த்து அணிந்துகொள்வதில் எந்தவிதமான தவறும் இல்லை. தங்களின் இஷ்ட தெய்வம் எப்போதும் உடனிருந்து காப்பதாக அவர்களின் நம்பிக்கை அமைந்திருக்கிறது.

?ராமேஸ்வரம் சென்றால் குழந்தை வரம் கிடைக்கும் என்கிறார்கள், ராமேஸ்வரத்தில் வசிக்கும் சிலருக்கு குழந்தை பாக்கியம் இல்லையே, இது பற்றி?
– அரிமளம் இரா. தளவாய் நாராயணசாமி.

உடம்பு சரியில்லை என்று டாக்டரிடம் செல்கிறோம், அந்த டாக்டருக்குக்கூட உடம்பு சரியில்லாமல் போகிறதே என்று கேட்பது போல் இருக்கிறது உங்கள் கேள்வி. டாக்டரும் ஒரு மனிதர்தானே. ராமேஸ்வரத்தில் வசிப்பவர்களும்
மனிதப் பிறவிதானே. மனிதப்பிறவி என்பதே பூர்வ ஜென்ம கர்மாவினை அனுபவிப்பதற்காகத்தான். கர்மாவின் அடிப்படையில் அவரவருக்கான வாழ்க்கை என்பது அமைகிறது. இதில் பாவ புண்ணியத்தின் விகிதாச்சாரம் முக்கியத்துவம் பெறும். புண்ணியத்தின் அளவு கூடுதலாகவும், பாவத்தின் அளவு குறைவாகவும் இருக்கும்போது பரிகாரம் செய்வதால், அதற்குரிய பலன் கிடைக்கிறது. சாபத்திற்கு விமோசனம் உண்டு என்பது போல் செய்த பாவத்திற்கு பிராயச்சித்தம் என்பதும் உண்டு. அவ்வாறு பிராயச்சித்தம் செய்வதற்காக ராமேஸ்வரத்திற்கு செல்லுங்கள் என்று சொல்கிறார்கள்.

ராமேஸ்வரத்திற்குச் சென்றால் மட்டும் குழந்தை வரம் கிடைத்துவிடும் என்று யாரும் சொல்லவில்லை. அங்கு சென்று செய்ய வேண்டிய கிரியைகளைச் சரிவர செய்ய வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள். எங்கு வேண்டுமானாலும் அந்த பிராயச்சித்த பரிகாரத்தை செய்யலாமே, அதற்கு ஏன் ராமேஸ்வரத்திற்குச் செல்ல வேண்டும் என்ற கேள்வி எழலாம். இதயமாற்று அறுவைசிகிச்சை என்பதை எல்லா மருத்துவமனைகளிலும் செய்துவிட முடியாது. அதற்கென்று இருக்கும் சிறப்பு மருத்துவமனைகளில் மட்டுமே செய்ய இயலும். அதேபோல சிறப்பு பரிகாரம் என்பதை எல்லா ஊர்களிலும் செய்ய இயலாது. எந்தவிதமான பிராயச்சித்தம் தேவைப்படுகிறதோ, அதற்கேற்றாற்போல் ராமேஸ்வரம் போன்ற தலங்களை தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள்.

இதயமாற்று அறுவைசிகிச்சை செய்யும் மருத்துவர் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையை செய்வதில்லை. அதேபோல் ராமேஸ்வரத்தில் வசிப்பவருக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்றால் அவருக்குத் தேவைப்படுகின்ற பிராயச்சித்தம் வேறொரு இடத்தில் செய்ய வேண்டியதாய் இருக்கலாம். அதனைத் தெரிந்துகொண்டு அவர் அந்தப் பிராயச்சித்தத்தை செய்து முடிக்கும் பட்சத்தில் அவருக்கு சந்தானப்ராப்தி கிடைக்கலாம். அவரது ஜாதகத்தில் நிச்சயமாக குழந்தைப் பேறுக்கான வாய்ப்பு இல்லை என்று உறுதியாகத் தெரியும்போது பரிகாரம் செய்யும்படி ஜோதிடர்கள் சொல்வதில்லை. நம்பிக்கையுடன் ஒரு செயலைச் செய்யும்போது அதில் குறைகண்டு விதண்டாவாதம் செய்யாமல் அவரது நம்பிக்கைக்குத் துணை செய்யும் விதமாகப் பேசி நேர்மறையான சிந்தனைகளை வளர்ப்பதே சான்றோர்களின் செயல்.

?ஒரு செயல் தோல்வியில் முடிந்தால் என்ன செய்வது?
– செல்வம், திருச்சி.

தோல்வி என்று ஏன் நினைத்துக் கொள்கிறீர்கள், அது வெற்றிக்கான பயிற்சி என்று நினைத்துக்கொள்ளுங்கள். ஒரு விஷயம் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். ஒரே முயற்சியில் வெற்றி அடைந்தவர்கள் அனேகமாக இருக்க மாட்டார்கள். நமக்கு வெற்றியாளர்களை எப்போது தெரியும்? அவர்கள் வெற்றி பெற்ற பிறகுதான் அவர்களைப் பற்றிப் பெரும்பாலும் தெரியும். ஆனால், அதற்கு முன்னால் அவர்களைப் பற்றிய கதையை கேட்டால்தான் அவருடைய முயற்சிகளும் தோல்விகளும் நமக்குப் புரியும். தோல்வி அடையும் பொழுது பயிற்சி கிடைக்கும். பயிற்சியின் முதிர்ச்சியில் வெற்றி கிடைக்கும். எனவே தோல்வி குறித்து கவலை வேண்டாம். அதுதான் வெற்றிக்கான பாதையைக் காட்டுகிறது.

?மாலைமாற்றும் சடங்கின்போது மணமக்களை சடக்கென்று சிலர் பின்னால் இழுக்க மாலை போடுபவர் நிலை தடுமாறி மாலை கீழே விழுந்துவிடுகிறதே… மாலை மாற்றும் சடங்கில் இந்த விளையாட்டு தேவைதானா?
– வி.வெங்கட்ராமன், செகந்திராபாத்.

இந்தச் சடங்கே விளையாட்டிற்காகச் செய்யப்படுவதுதானே. இதில் ஏன் உங்களுக்கு இத்தனை வருத்தம்? பால்ய விவாஹம் செய்து வந்த அந்தக் காலத்தில் சிறு பிள்ளைகளாக இருக்கும் மணமக்களுக்கு விளையாட்டு காட்டுவதற்காகவும், வேடிக்கைக்காகவும் இந்த மாலை மாற்றுதல் சடங்கினை நமது சம்பிரதாயங்களில் ஒன்றாக வைத்தார்கள். மணமக்களின் தாய்மாமன்கள் பிள்ளைகளை தங்கள் தோள்களில் தூக்கி வைத்துக்கொண்டு நடனமாடி மாலை மாற்றினார்கள். இந்த வேடிக்கையான நிகழ்வில் மாலை கீழே விழுவதை அபசகுணமாக எண்ணுவது அறியாமை. நீங்கள் குறிப்பிடும் இந்த வேடிக்கையான நிகழ்வு தாலிகட்டுதலுக்கு முன்னர் நடப்பதாகும். அதேநேரத்தில் மாங்கல்யதாரணம் முடிந்து, பாணிக்ரஹணம், சப்தபதி முதலான நிகழ்வுகள் ஆன பின்பு, இதுபோன்ற வேடிக்கைகளைச் செய்ய மாட்டார்கள்.

இன்றும் மாங்கல்யதாரணம் ஆன பின்பு தமிழகத்தில் பல இனத்தவர்களில் மாலை மாற்றும் சம்பிரதாயம் உண்டு. தாலி கட்டிய பிறகு மாலை மாற்றும்போது இவ்வாறு வேடிக்கையாக யாரும் செயல்படுவது இல்லை. காசியாத்திரையைத் தொடர்ந்து வரும் மாலைமாற்றும் சம்பிரதாயத்தில் வேடிக்கையாகச் செயல்படுவதில் எந்தவிதமான தவறும் இல்லை. இதுபோன்ற சம்பிரதாயங்கள் மணமகன், மணமகள் என இரு வீட்டாரையும் சந்தோஷமான மனநிலைக்குக் கொண்டுவருகின்றன என்பதால், இதில் குறைகாணத் தேவையில்லை.

?காலையில் எழுந்ததும் கண்ணாடி, உள்ளங்கை, கடவுள் படம் இவற்றில் எதைப் பார்த்தால் நல்லது?
– கே.விஸ்வநாத், அல்சூர்.

இந்த மூன்றுமே நல்லதுதான். காலையில் எழுந்ததும் முதலில் உள்ளங்கையையும், அதன்பின் கண்ணாடி, கடவுள்படம் என்ற வரிசையில் பார்ப்பது அன்றைய நாளை சிறப்பாக அமைத்துக் கொடுக்கும். காலையில் எழுந்ததும் உன் முகத்தில்தான் விழித்தேன், அதனால்தான் சிரமப்பட்டேன் என்று அடுத்தவர்களை குறை சொல்லும் குணமாவது இந்தப் பழக்கத்தினால் காணாமல் போகும்!

The post தெளிவு பெறுவோம் appeared first on Dinakaran.

Read Entire Article