தெளிவான இலக்கு! வெற்றியை வசப்படுத்தும்

2 hours ago 1

ஒருவருடைய லட்சியம் எப்படி இருக்க வேண்டும் என்றால் கலங்கரை விளக்கைப் போல இருக்க வேண்டும்.அது தன்னுடைய வேலையை செய்யும் போது பெரிய கப்பல் என்று பார்ப்பதில்லை,சிறிய படகு என்று பார்ப்பதில்லை,தான் இருக்கும் இடத்தில் தான் கரை உள்ளது என்று ஒளி மூலம் வழிகாட்டி தொடர்ந்து செயல்பட்டு கொண்டே இருக்கும்.அதுபோலதான் நமது லட்சியமும் இருக்க வேண்டும்.ஒரு துறைமுகத்தில் இரண்டு படகுகள் இருந்தன. வெள்ளைப்படகு மற்றும் நீலப்படகு. வெள்ளைப்படகு பளபளவென்று பார்க்கவே அழகாக இருந்தது.தன்னைப்போல் அழகான படகு அந்தத் துறைமுகத்திலேயே வேறு இல்லை என்று நினைத்தது.ஆனால் இயற்கையிலேயே பயந்த சுபாவம்.கரையை விட்டு நகரவே நகராது.கரையை விட்டு கடலுக்குள் நகர்ந்தால் அழகு கெட்டுவிடும். வெள்ளை மேனி கருப்பாகிவிடும். கடலில் மிதக்கத் தொடங்கி விட்டால் எப்போது வேண்டுமானாலும் எந்த சேதாரம் ஏற்படலாம்.எதற்கு தேவை இல்லாத ரிஸ்க் என்று நினைத்தது.ஆனால் நீலப்படகு வெள்ளைப் படகுக்கு நேர் எதிரானது.பெயர் தான் நீலப்படகே தவிர அதன் உடலில் ஒரு துளி நீல பெயிண்ட் கூடஇல்லை.அத்தனையும் உதிர்ந்து விட்டது.ஆனால் நீலப்படகுக்கு அழகைப் பற்றிய கவலைகள் எல்லாம் இல்லை.எப்போது யார் வந்து கூப்பிட்டாலும் கடலுக்குள் செல்லத் தயாராகிவிடும்.அன்றைய தினம் ஒரு வெளிநாட்டு மாலுமி துறைமுகத்துக்கு வந்தார். மறுகரைக்கு போக வேண்டும் என்று அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார்.அதிகாரிகள் சம்மதித்தனர்.

எனக்கு அந்த வெள்ளைப் படகு வேண்டும் அதுதான் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது என்றார் மாலுமி.இந்தப் படகு இதுவரையில் வெளியில் வந்ததே கிடையாது.இதற்கு கடல் பழக்கமில்லை என்றார்கள்.கடலைப் பழகிக் கொள்ளாத படகு எதற்காக துறைமுகத்தில் நின்று கொண்டிருக்கிறது?என்னிடம் கொடுங்கள் நான் அதைப்பழக்குகிறேன் என்று சொன்னார்.வெள்ளைப் படகு நடுங்கிக் கொண்டிருந்த போதே சில ஆட்கள் அதைப்பிடித்து இழுத்தார்கள்.ஒரே இடத்தில் நீண்ட காலம் தங்கி விட்டதால்,அந்தப் படகால் ஒரு இன்ச் கூட நகர முடியவில்லை.கயிறு கட்டிபிடித்து இழுத்தார்கள்.வெள்ளைப்படகு அலறியது.ஐயோ என் உடம்பில் கயிறு கட்டி விட்டார்களே. வலிக்கிறதே,பெயிண்ட் உதிர்ந்து விடுமே என்றது.அப்போதுதான் அவர்கள் கவனித்தார்கள் படகின் அடித்தளம் கிட்டத்தட்ட பாழ். இரும்புப் பகுதிகள் துருப்பிடித்துவிட்டன.கட்டைகள் உளுத்துப் போய்விட்டன.மாலுமி படகை பார்த்து பயந்து விட்டார். எனக்கு வேறு படகு கொடுங்கள்.இந்த படகு வேண்டாம் என்றார்.இந்த முறை மாலுமிக்கு கிடைத்தது நீலப்படகு கால் பதித்த உடனே மாலுமிக்கு தெரிந்து விட்டது.இது நன்றாக பழகிய படகு, லாவகமாக அவரை ஏற்றுக் கொண்டு முன்னேறி சென்றது நீலப்படகு.நடுநடுவே இடி இடித்தது.பெரும் மழை பெய்தது. ஆனால் நீலப்படகு கலங்கவே இல்லை. தைரியமாக முன்னேறியது.நீண்ட பயணத்துக்கு பிறகு பத்திரமாக தரையை தொட்டது.படகு என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்று மகிழ்ச்சியுடன் சொன்னார் அந்த மாலுமி.

தேவையற்ற பயம், தேவையற்ற தயக்கம் போன்றவற்றல் எந்த முன்னேற்றமும் இல்லாமல் தனது வாழ்நாள் முழுவதும் வெள்ளைப்படகு அப்படியேதான் இருக்க போகிறது.எந்த தேசத்து மாலுமி வந்தாலும் அதை ஒன்றும் செய்து விட முடியாது.ஆனால் நீலப்படகு இன்னும் பல தேசங்களை வெற்றிகரமாக கடந்து சென்று கொண்டிருக்கிறது.தொடர்ந்து முன்னேறிக் கொண்டே இருக்கிறது.கடல் சொல்லிக் கொடுக்கும்பாடங்களை தொடர்ந்து படித்துக் கொண்டே இருக்கிறது.பயம்,தயக்கம் போன்ற தாழ்வுமனப்பான்மை உள்ளவர்கள் எந்த ஒரு இலக்கும் இல்லாமல்,அதனால் வாழ்வில் முன்னேற்றமும் இல்லாமல் சாதாரண வாழ்க்கை வாழ்கிறார்கள்.ஆனால் நீலப்படகை போல சிலர் தெளிவான இலக்குடன் முன்னேறி கொண்டே இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒருவர்தான் காசிமா என்ற சாதனைப் பெண்.சென்னை புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான மேஹ்பூப் பாஷாவின் மகள்தான் காசிமா. 17 வயது கல்லூரி மாணவியான இவர், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில், மகளிர் தனிநபர், இரட்டையர் பிரிவு, குழு பிரிவு என 3 பிரிவுகளிலும் தங்கம் வென்றுள்ளார்.

தனது கடின உழைப்பின் மூலம் சர்வதேச அரங்கில் சாதனை படைத்த அவருக்கு, தற்போது தமிழ்நாடு அரசு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையாக அளித்து கௌரவித்துள்ளது.6 வயது முதல் பயிற்சி எடுத்து வருகிறேன். 7 வயதில் தேசிய அளவிலான போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தேன். எனது அப்பாதான் கோச்சிங் கொடுத்து வருகிறார்.தமிழ்நாடு கேரம் சங்க செயலாளர் மரிய இருதயமும் எனக்கு கோச்சிங் கொடுக்கிறார். என் வீட்டின் சுவர், கண்ணாடி என எல்லா இடத்திலும் ‘I’m a world champion one day’ என எழுதி வைத்திருப்பேன் என்கிறார் தெளிவான இலக்குடன் காசிமா.எங்களது பகுதியில் சிறிய அளவில் கிளப் ஒன்றையும் என் அப்பா நடத்தி வருகிறார். அதில், 40 முதல் 45 மாணவர்கள் வரை கேரம் கற்று வருகின்றனர்.இங்கு கேரம் கற்றுக் கொள்பவர்களில் பெரும்பாலானோர், ஆட்டோ, ரிக்‌ஷா ஓட்டுபவர்களின் பிள்ளைகள் தான்.இப்போது தமிழ்நாடு அரசு எனக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகை அளித்திருப்பது எனக்கு மட்டுமல்ல என்னைப் போன்ற பலருக்கும் ஊக்கத்தை அளிப்பதாகவும் அதற்கு தமிழக முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் தனது நன்றிகளைதெரிவித்துக் கொள்கிறார் காசிமா.

கேரம் என்பது இண்டோர் கேம் என்பதால், பெண்களுக்கு இது நல்ல ஒரு விளையாட்டு.கேரம் விளையாட ஆரம்பித்தபோது, பலர் என் அப்பாவிடம் எதற்காக பெண் பிள்ளைக்கு இந்த விளையாட்டெல்லாம் சொல்லித் தருகிறீர்கள் என அறிவுரை கூறினார்கள்.ஆனால், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல், சாதிக்க விரும்பிய எனக்கு உறுதுணையாக என் அப்பா இருந்தார் என்கிறார் காசிமா.ஆட்டோ ஓட்டுநரான அவரது தந்தை மெஹ்பூப் பாஷா கேரம் போட்டிகள் மீது கொண்டிருந்த ஆர்வமே காசிமாவின் இந்த வெற்றிக்கு தூண்டுதலாக அமைந்துள்ளது. காசிமாவின் வாழ்க்கை நமக்கு உணர்த்தும் பாடம் என்னவென்றால் வறுமை என்பது வெட்கத்துக்குரியது அல்ல,வறுமை என்பது நாம் வெல்வதற்கான ஒரு தூண்டுகோல் என்பதுதான், வறுமையை நாம் வெல்வதற்கான ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.வறுமையை நினைத்து பயந்து விடாதே,திறமை இருக்கு மறந்து விடாதே,என்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் பாடல் வரிகள் தான் காசிமாவின் சாதனையை பார்க்கும் போது நமக்கு உணர்த்துகிறது.இவரைப் போல ஒரு தெளிவான இலக்கைத் தீர்மானித்த பின் அதன் ஆழத்தை என்னவென்று இறங்கி பார்த்து விட வேண்டும். தாழ்வுமனப்பான்மையை தள்ளி வைத்து விட்டு,எத்தனை தடங்கல்கள் வந்தாலும் உங்கள் இலக்கை மாற்றிக் கொள்ளாமல் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே இருங்கள்.நிச்சயம் தீர்க்கமான வெற்றி உங்களைத் தேடிவரும்.

The post தெளிவான இலக்கு! வெற்றியை வசப்படுத்தும் appeared first on Dinakaran.

Read Entire Article