தெலுங்கு வருடப் பிறப்பு.. அருணாசலேஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்

5 days ago 2

திருவண்ணாமலையில் உள்ள உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவிலில் வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படும். அதன்படி நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் மற்றும் தெலுங்கு வருட பிறப்பு என்பதாலும் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் ஏராளமானோர் குவிந்தனர்.

ஆந்திரா, தெலுங்கானாவை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். இதனால் அதிகாலை முதலே நீண்ட வரிசை காணப்பட்டது. கோவிலில் பக்தர்கள் ராஜகோபுரம் மற்றும் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக உள்ளே சென்றனர். பக்தர்களின் வரிசையானது கோவிலுக்குள் மட்டுமின்றி அம்மணி அம்மன் கோபுரம் அருகில் உள்ள வடஒத்தவாடை தெருவிலும் நீண்டு காணப்பட்டது.

கோவிலில் சாமி தரிசனம் செய்ய 3 மணி நேரத்திற்கு மேலானதாக பொது தரிசன வழியில் சென்ற பக்தர்கள் தெரிவித்தனர். நேற்று பகலில் வெயில் சுட்டெரித்தது. வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். வரிசையில் நின்ற பக்தர்கள் சிலர் கையில் குடை பிடித்தபடியும், தலையில் துண்டு போன்ற துணிகளை போட்ட படியும் நின்றனர். சாமி தரிசனம் செய்ய வரிசையில் சென்ற பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் நீர், மோர் வழங்கப்பட்டது.

மேலும் தனித்தனியாக ஏராளமான பக்தர்கள் நேற்று அதிகாலை முதல் இரவு வரை கிரிவலம் சென்றபடி காணப்பட்டனர். அத்துடன் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோவில்கள் மற்றும் இடுக்கு பிள்ளையார் கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

அருணாசலேஸ்வரர் கோவில் அருகில் பழமை வாய்ந்த பூத நாராயணன் பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று தெலுங்கு வருடப் பிறப்பை முன்னிட்டு சாமிக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. இந்த கோவிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Read Entire Article