தெலங்கானாவில் நீர்ப்பாசன திட்டத்திற்காக சுரங்கம் தோண்டும் பணியில் மண் சரிந்து 8 பேர் சிக்கினர்: மீட்கும் பணிகள் தீவிரம்

8 hours ago 3

திருமலை: தெலங்கானாவில் நீர்ப்பாசன திட்டத்திற்காக சுரங்கம் தோண்டும் பணியின்போது மண் சரிந்து 8 பேர் சிக்கினர். அவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தெலங்கானா மாநிலம் நாகர் கர்னூல் மாவட்டத்தில் டோமலபென்டா அருகே ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் பணிகள் கடந்த 2005ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டம், 60 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டது. ஏற்கனவே 6 முறை காலக்கெடுவை நீட்டித்துள்ள அரசு சமீபத்தில் ஜூன் 2026க்குள் பணிகளை முடிக்க முடிவு செய்துள்ளது.

அதன்படி பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக மொத்தம் 44 கிலோ மீட்டர் நீளம் சுரங்கப்பாதை தோண்டப்பட வேண்டிய நிலையில், தற்போது மீதமுள்ள 9.559 கிலோ மீட்டர் சுரங்கம் தோண்டும் பணி நடந்து வருகிறது. முதல் முறை ரூ.4,637 கோடி என மதிப்பிடப்பட்ட இந்த நீர்பாசன திட்டத்தில் இதுவரை ரூ.2,646 கோடி பணிகள் நடந்துள்ளது. இந்த திட்டத்தால் 3.41 லட்சம் ஏக்கருக்கு பாசன நீர் கிடைக்கும். 200 கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டமும் உள்ளது.

மேலும் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள உதய சமுத்திர திட்டமும் இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக செயல்படுத்தப்படுகிறது. இந்நிலையில் இந்த பணிகளை வேகமாக முடிக்க தீவிர பணிகள் நடந்து வந்த நிலையில் நேற்று சுரங்கத்தில் மேற்பகுதி இடிந்து விழுந்ததில் சிக்கிய 2 பொறியாளர்கள் உட்பட 8 பேர் சிக்கி கொண்டனர். தகவலறிந்த நீர்ப்பாசன அமைச்சர் உத்தம்குமார் ரெட்டி, சுற்றுலாத்துறை அமைச்சர் ஜூபள்ளி கிருஷ்ணா ராவ், டிஐஜி, ஐஜி ஆகியோருடன் சேர்ந்து சம்பவ இடத்தை பார்வையிட்டார்.

சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்டு உயிருடன் வெளியே கொண்டு வர அரசு முழு முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினருடன் பணிகளை தொடங்கி உள்ளனர். இதனிடையே செய்தியாளர்களுக்கு அமைச்சர் உத்தம் குமார் ரெட்டி அளித்த பேட்டியில் கூறியதாவது: சுரங்கத்தில் 14வது கிலோமீட்டரில் மண் சரிந்து இடிந்து விழுந்ததில் இடது பக்க சுரங்கப்பாதையில் பணிபுரியும் தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.

சுரங்கத்தின் உள்ளே சிக்கியவர்களில் இரண்டு பொறியாளர்கள், இரண்டு இயந்திர ஆபரேட்டர்கள் மற்றும் நான்கு தொழிலாளர்கள் அடங்குவர். அவர்களில் 6 பேர் உத்தரபிரதேசம் மற்றும் ஜார்க்கண்டைச் சேர்ந்தவர்கள். பொறியாளர்கள் ஒப்பந்த பணிகள் மேற்கொள்ளும் ராபின்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர். சுரங்கப்பாதையில் தண்ணீர் கசிவதைக் கண்ட இயந்திர ஆபரேட்டர்களில் ஒருவர் எச்சரிக்கை விடுத்தார். அதைத் தொடர்ந்து 42 தொழிலாளர்கள் பாதுகாப்பான இடத்திற்குச் சென்றனர்.

இருப்பினும், அதற்குள் பெரிய அளவிலான மண் சரிந்து, மறுபுறம் இருந்த 8 பேர் சிக்கிக் கொண்டனர். தொழிலாளர்களை பாதுகாப்புடன் மீட்பதற்காக உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட சுரங்கத்தில் சிக்கி கொண்டவர்களை மீட்ட குழுவினரிடமும் அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தொழிலாளர்களை உயிருடன் கொண்டு வரும் முயற்சியில் அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

* தேவையான உதவி செய்யப்படும்- பிரதமர் மோடி
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பிரதமர் மோடி, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை போனில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார். அப்போது சம்பவம் குறித்து விவரங்களை கேட்டறிந்து, மண் சரிவில் சிக்கியுள்ள 8 பேரையும் பத்திரமாக மீட்க தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என உறுதி அளித்துள்ளார்.

The post தெலங்கானாவில் நீர்ப்பாசன திட்டத்திற்காக சுரங்கம் தோண்டும் பணியில் மண் சரிந்து 8 பேர் சிக்கினர்: மீட்கும் பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Read Entire Article