
சென்னை,
தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இருந்தாலும் இந்த ஆண்டு கோடை வெப்பத்தின் தாக்கம் முந்தைய ஆண்டுகளைவிட சற்று குறைவாகவே இருக்கும் என சொல்லப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் வழக்கமாக மே மாத இறுதியில் அல்லது ஜூன் மாதம் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு முன்கூட்டியே பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் ஏற்பட்டு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதாவது, தெற்கு அந்தமான் கடல், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் நிகோபர் தீவுகளின் சில பகுதிகளில் வருகிற 13-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தென் மேற்கு பருவமழை தொடங்கக்கூடும் என ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்குவது என்பது மழைக்கான சாதகமான சூழலைத்தான் தரும் என தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அரபிக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி கேரளாவில் அந்த நேரத்தில் நல்ல மழையை கொடுக்கும் என்று கணித்து உள்ளனர்.
பொதுவாக தென்மேற்கு பருவமழையால் தமிழ்நாட்டுக்கு பெரிய அளவு மழை இருக்காது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில்தான் இந்த பருவமழை இருக்கும். மற்ற இடங்களில் வெப்பசலனம் காரணமாக மழை பெய்யக்கூடும்.
அந்தவகையில் நடப்பாண்டில் மே மாதத்தில் வெப்பத்தின் தாக்கம் குறைவாகவே இருக்கும் என வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இடையிடையே வெப்பசலனம் காரணமாக கோடை மழைக்கு வாய்ப்பு அதிகம் இருப்பதால், சராசரியாக வெப்பம் குறைந்து காணப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.