
சென்னை,
தென்மேற்கு பருவமழை கேரளாவில் வழக்கமாக ஜூன் 1-ந்தேதி தொடங்கும் நிலையில், இந்த ஆண்டு 8 நாட்களுக்கு முன்கூட்டியே தொடங்கி இருப்பதாகவும், இதற்கு முன்பு 2009-ம் ஆண்டு மே மாதம் 23-ந்தேதி தென் மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியதாகவும், அந்த வகையில் 16 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பருவமழை முந்தியிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் அமுதா தெரிவித்தார்.
மேலும், தெற்கு கொங்கன் கடலோர பகுதிகளில் இருந்து மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் உருவாகிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, கிழக்கு திசையில் நகர்ந்து, தாழ்வு மண்டலமாக ரத்தனகிரி-தாபோலுக்கு இடையே கரையை கடந்தது. இதுதவிர மத்திய மேற்கு மற்றும் அதனையொட்டிய வடக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை மறுதினம் (செவ்வாய்க்கிழமை) உருவாக வாய்ப்பு இருக்கிறது.
இந்த காரணங்களினால், இன்றும் (ஞாயிற்றுக்கிழமை), நாளையும் (திங்கட்கிழமை) நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு கனமழை முதல் அதிகனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுவதால், அந்த மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல், திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, தென்காசி, கன்னியாகுமரி,ராமநாதபுரம், மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்பதால் அங்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், திருப்பூர், திண்டுக்கலில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும் என்பதால் மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கிறது.
நீலகிரி
இந்தநிலையில், கூடலூர் ஓவேலி வனச்சரகத்தில் யானை விரட்டும் காவலராக பணியாற்றி வருகிறார் ராஜேஷ். இவர் விடுமுறை பெற்று கேரளா மஞ்சேரியை நண்பர்கள் ஆண்டோதாமஸ், 53, அருண் தாமஸ், 44, ஆகியோருடன், ஓவேலி அண்ணா நகர் - தருமகிரி சாலை வழியாக கூடலூர் நோக்கி காரில் சென்றுகொண்டு இருந்தார்.
செல்லும் வழியில் ஆற்றைக் கடக்க முயன்ற போது, கார் வெள்ளத்தில் சிக்கியது. மூவரும் தப்பிக்க வழியின்றி, காரின் மீது ஏறி நின்று சத்தமிட்டனர். கூடலூர் நிலைய தீயணைப்பு வீரர்கள், நள்ளிரவு 1:00 மணிக்கு, அப்பகுதிக்கு சென்று, போராடி அதிகாலை 3:30 மணிக்கு மூவரையும் உயிருடன் மீட்டனர்.
கன்னியாகுமரி
கேரளாவில் பருவமழை துவங்கிய நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்திலும் அதன் தாக்கம் தெரிகிறது. இரண்டு நாட்களாக பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது. இரணியல் அருகே கண்டன்விளையில் காற்றின் வேகத்தில், 150 அடி உயர மொபைல் போன் கோபுரம் சரிந்து, ராஜமல்லி என்பவரது வீட்டின் மீது விழுந்தது.வீடு கடுமையாக சேதமடைந்தது.
குலசேகரம் அருகே அண்டூர் சரக்கல்விளை பகுதியில், காற்றில் அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்த ஹோட்டல் தொழிலாளி கிருஷ்ணன், 75, உயிரிழந்தார். ஆற்றுார் ஆனைக்குழி பகுதியில் செல்லையன் 92, என்பவரது வீட்டில் மரம் விழுந்ததில் கூரை சேதமடைந்து செல்லையன் பலத்த காயமடைந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம்
அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் ராமேஸ்வரம் அருகே பாம்பன் துறைமுகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
குற்றால மெயின் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க விதித்த தடை நீக்கம்
கனமழை முன்னெச்சரிக்கையாக குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலத்தில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டு இருந்தது. ஐந்தருவியில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில், குற்றால மெயின் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க விதித்த தடை நீக்கப்பட்டுள்ளது.
தேனி
தேனியில் போடி மெட்டு சாலையில் பலத்த சூறைக்காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது.
சேலம்
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் அரசு தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் அருகே ராட்சத மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மரத்தை ராட்சச அறுவை எந்திரம் மூலம் அகற்றும் பணியில் வன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கோவை
மேற்கு தொடர்ச்சி மலையில் சிறுவாணி நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. சித்திரைசாவடி தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சதுரகிரி கோவிலுக்கு செல்ல தடை
கனமழை எச்சரிக்கையால் சதுரகிரி கோவிலுக்கு செல்ல 2 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. அனுமதி மறுக்கப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.