தென்மாவட்டங்களில் வலுப்பெறும் ெதாழில்முனைவோர்: ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் காலூன்றும் பெண்கள்: நெல்லையில் 43% நிர்வகிப்பு

2 hours ago 1

ெசன்னை தி நகரில் ஜவுளி வியாபாரம், டிவிஎஸ் மோட்டார் கம்பெனி, சிம்சன்ஸ் நிறுவனம், பிரபல வீட்டு உபயோக பொருட்கள் நிறுவனமாக வசந்த் அன் கோ, சென்னை, பிரபல தொழில்நுட்ப நிறுவனமான எச்சிஎல், தென்காசி ஸோகோ நிறுவனம், திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள், சென்னை, கோவை, ஈரோடு, உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் மளிகை கடைகள், காய்கறி கடைகள், ரியல் எஸ்டேட், கட்டுமான நிறுவனங்கள் என தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டத்தினருக்கு முக்கிய பங்கு உண்டு. அந்த வகையில் சமீப காலமாக தென்மாவட்ட பெண்களும் தொழில் துறையில் சாதித்து வருகின்றனர். மாறி வரும் தகவல் தொழில்நுட்ப காலத்தில் கணினி துறை வியத்தகு வளர்ச்சி அடைந்துள்ளது. இதனால் பிஇ முடித்த இன்ஜினியர்கள் தகவல் தொழில்நுட்ப நிறுவன பணிகளுக்காக ஒரு காலத்தில் பெங்களூரு, ஐதராபாத் என்ற பெரு நகரங்களுக்கு சென்று வந்த நிலையில், தற்போது சென்னையில் டைடல் பார்க், கோவை, மதுரை என தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் தமிழ்நாட்டின் டயர் 2 சிட்டி என அழைக்கப்படும் இரண்டாம் நிலை நகரங்களிலும் அமைக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடியில் மினி டைடல் பார்க் அமைக்கப்பட்டு விரைவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறக்கப்பட உள்ளது. முதல்வராக 2021ம் ஆண்டு மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. மேலும் துபாய், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொண்டு வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டார். இதன் மூலம் 2030க்குள் தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக மாற்ற முதல்வர் மு.கஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். முன்னணி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதன் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். இதற்காக மாவட்டம் தோறும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு முன்னணி நிறுவனங்கள் ஆள் தேர்வில் ஈடுபட்டு வருகின்றன.

இது மட்டுமல்லாது வேலை தேடுபவர்களாக நாம் இருப்பதை விட வேலை கொடுப்பவர்களாக மாற வேண்டும். படித்த இளைஞர்கள் தொழில் நிறுவனங்களை உருவாக்கி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் இலக்கு நிர்ணயித்துள்ளார். அதற்காக தமிழ்நாடு முதல்வரின் உத்தரவுப்படி, புத்தொழில் தொடங்குவதற்கு ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நெல்லை மாவட்டம், சமீப காலங்களில் வளர்ந்து வரும் தொழில் முனைவோர் மற்றும் புத்தொழில் சூழல் அமைப்பிற்கான கவனத்தை ஈர்த்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக, இந்தப் பகுதியில் இருந்து அதிகமான தடைகளை உடைத்து, ஸ்டார்ட்-அப் சூழல் அமைப்பில் இளைஞர்கள் இறங்கியுள்ளனர். கடந்த 2024 செப்டம்பர் 27ம் தேதி நிலவரப்படி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களை உள்ளடக்கிய திருநெல்வேலி மண்டல ஸ்டார்ட் அப் மையத்தில் 405 ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் பதிவு பெற்றுள்ளன என தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் இன்னோவேஷன் மிஷன் (ஸ்டார்டப் டிஎன்) தரவுகள் தெரிவிக்கின்றன. இதில் நெல்லை மாவட்டத்தில் மட்டும் 207 ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் உள்ளன. இதில் பெண்களை இணை நிறுவனர்களாகக் கொண்டவை 88 ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள். அதாவது நெல்லை மாவட்டத்தில் உள்ள மொத்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் 43 சதவீதம் பெண்களால் நிறுவப்பட்டது அல்லது இணைந்து நிறுவப்பட்டது. நெல்லையை பொறுத்தவரை இ வணிகம், உணவுப் பொருள் உற்பத்தி, வேளாண் பொருட்கள் மற்றும் அது சார்ந்த பொருட்கள் உற்பத்தி, தொழில்நுட்ப நிறுவனங்கள், மருத்துவம் சார்ந்த தொழில்கள், மகளிர் சுயஉதவிக்குழு தயாரிப்பு பொருட்கள் என ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களில் குறைந்தது 2 முதல் 10 பேர் வரை உள்ளனர்.

இதுகுறித்து தொழில் முனைவோர் கூறுகையில், ‘கொரோனா தாக்குதலுக்கு பிறகு பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றியவர்கள் சொந்த ஊருக்கு திரும்பி விட்டனர். ஒரு புறம் வேலை இழப்பு, ஆட் குறைப்பு, ஊதியம் குறைப்பு ஆகியவற்றால் புத்தொழில் முனைய ஆர்வம் காட்டுகின்றனர். நெல்லையில் பல ஸ்டார்ட்-அப்கள் கார்ப்பரேட்களில் பணியாற்றியவர்களால் நிறுவப்பட்டது. இப்பகுதியைச் சேர்ந்த மக்களின் உள்ளார்ந்த தொழில் முனைவோர் மனப்பான்மை. அதாவது முன்னணி நிறுவனங்கள், சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டத்தினரால் தொடங்கப்பட்டது. அது மட்டுமல்லாது சிலிக்கான் பள்ளத்தாக்கில் உள்ள பலர் இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள். நெல்லையை மையமாக வைத்து கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் டாடா பவர் மற்றும் போஷ் போன்ற பெரிய நிறுவனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பெரிய நிறுவனங்கள் நமது பகுதியில் தொழில் தொடங்கும் போது, நாம் உள்ளூரில் தொழில் தொடங்கினால் என்ன என்ற ஆர்வம் பலரிடம் மேலோங்குகிறது. ஸ்டார்ட் அப் டிஎன் அமைப்பு, உள்ளூர் ஸ்டார்ட்-அப்களுக்கு முக்கியமான ஆதாரங்கள், வழிகாட்டுதல் மற்றும் நெட்வொர்க்கிங் வாய்ப்புகளை வழங்கியுள்ளது. இதனால் உள்ளூர் ஸ்டார்ட் அப் நிறுனவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது’ என்றனர். இதுகுறித்து ஸ்டார்ட்அப் டிஎன் தலைமை நிர்வாக அதிகாரி சிவராஜா ராமநாதன் கூறுகையில், ‘ஆரம்ப கட்ட ஸ்டார்ட் அப்களை கண்டறிந்து அவர்களுக்கு வழிகாட்ட ஸ்டார்ட் அப் டிஎன் முயற்சிகள் மேற்கொண்டுள்ளது. இதற்காக நெல்லை உள்ளிட்ட 5 மாவட்டங்களை உள்ளடக்கி மண்டல நிறுவனம் பிரத்யேகமாக தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஏராளமானோர் புதிய தொழில்முனைவோராக உருவாகி வருகின்றனர்’ என்றார்.

 

The post தென்மாவட்டங்களில் வலுப்பெறும் ெதாழில்முனைவோர்: ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் காலூன்றும் பெண்கள்: நெல்லையில் 43% நிர்வகிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article