*பாசக்கார தாயின் கொடூர செயல்
கண்டாச்சிபுரம் : கண்டாச்சிபுரம் அருகே ஆதரவற்ற நிலையில் பிறந்து ஒரு மணி நேரமே ஆன தொப்புள் கொடியுடன் கதறிய பெண் சிசு மீட்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அடுத்த துத்திப்பட்டு கிராமத்தில் நேற்று அதிகாலை அங்குள்ள ரேஷன் கடை அருகில் திடீரென பச்சிளங்குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது.
இதையடுத்து அப்பகுதி கிராம மக்கள் அங்கு சென்று பார்த்தபோது அதிர்ச்சியடைந்தனர். அங்கு பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தை தொப்புள் கொடியுடன் ஆதரவற்ற நிலையில் கதறியபடி கிடந்தது தெரியவந்தது.
இதையடுத்து அப்பகுதி மக்கள் அங்குள்ளவர்களிடம் விசாரித்தபோது அக்குழந்தை யார் குழந்தை என்பது தெரியவில்லை. இதனால் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அதன் மூலம் குழந்தையை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்த போது குழந்தை பிறந்து சுமார் ஒரு மணி நேரமே இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அனந்தபுரம் போலீசார் பெண் குழந்தை பற்றி அப்பகுதியில் விசாரணை நடத்தி வருகின்றனர். பச்சிளங்குழந்தையை வீசி சென்ற பாசக்கார தாயின் கொடூர சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
The post பிறந்து ஒருமணி நேரமே ஆன நிலையில் ரேஷன் கடை அருகே தொப்புள் கொடியுடன் கதறிய பெண் சிசு மீட்பு appeared first on Dinakaran.