தென்மாவட்டங்களில் கொட்டித்தீர்த்த கனமழை: மாஞ்சோலை ஊத்தில் 50 செ.மீ, தாமிரபரணியில் சீறிப்பாயும் வெள்ளம்

4 weeks ago 7

* தமிழகம்-கேரள போக்குவரத்து துண்டிப்பு, சபரிமலை சென்ற பக்தர்கள் தவிப்பு

நெல்லை: தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. அதிகபட்சமாக நெல்லை மாவட்டம், மாஞ்சோலை ஊத்தில் 50 செ.மீ மழை பெய்தது. தாமிரபணியில் சீறிப்பாயும் வெள்ளத்தால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகம்-கேரள போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் சபரிமலை பக்தர்கள் தவித்தனர். பெஞ்சல் புயலால் வடமாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியை மழை பதம் பார்த்தது. இதனால் திரும்பிய பக்கமெல்லம் வெள்ளக்காடாக காட்சியளித்தது.

இந்நிலையில், தென்மேற்கு வங்க கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் வட, தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதி என 20க்கு மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் கனமழையால் 21 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த மழை நேற்றும் பல்வேறு மாவட்டங்களில் கொட்டித்தீர்த்தது. குறிப்பாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுவிக்கப்பட்டிருந்தது.

இந்த 3 மாவட்டங்களில் நேற்றுமுன்தினம் அதிகாலை 4 மணிக்கு கனமழை தொடங்கியது. தொடர்ந்து 25 மணி நேரம் தாண்டியும் மழை நீடித்தது. தொடர் மழையால் பொதுமக்கள் பணிகளுக்கு செல்ல முடியாமலும், கடைகளுக்கு செல்ல முடியாமலும் தவித்தனர். மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கினர். இடைவிடாத மழையால் மணிமுத்தாறு அருவி, அகஸ்தியர் அருவி, நம்பியாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

68.57 அடியாக இருந்த சேர்வலாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 28.77 அடி உயர்ந்து. 97.34 அடியானது. திருக்குறுங்குடி நம்பி கோயிலுக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மணிமுத்தாறு அருவி, அகஸ்தியர் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. நெல்லை மாநகர பகுதிகள் மற்றும் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் இடைவிடாத மழை கொட்டி தீர்த்தது.

அதிகபட்சமாக நெல்லை மாவட்டத்தில் ஊத்தில் 50.4 செ.மீ மாஞ்சோலையில் 32 செ.மீ மழை பதிவானது. அம்பையில் 36.6 செ.மீ,மணிமுத்தாறு 30 செ.மீ, வீரவநல்லூரில் 27.2 செ.மீ, பாபநாசம்-22 செ.மீ, சேரன்மகாதேவியில் 22 செ.மீ மழை பதிவானது. நெல்லை மாநகரில் 20 செ.மீ மழை பெய்தது. இதனால் ஆயிரக்கணக்கான வீடுகளில் வெள்ளம் புகுந்தது. சேரன்மாதேவி தாலுகாவில் 1 லட்சம் வாழைகள் சேதமடைந்தன. தென்காசி மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் அதிகாலையில் இருந்து நேற்று காலை வரை தொடர்ந்து மழை பெய்தது.

நேற்று பகல் பொழுதிலும் அவ்வப்போது மழை காணப்பட்டது. இதனால் ெபாதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. தென்காசியில் 21.5 செ.மீ, செங்கோட்டை 17 செ.மீ, சங்கரன்ேகாவில் 13.2 செ.மீ மழை பதிவானது. செங்கோட்டையில் தொடர் மழையால் தமிழகத்தையும் – கேரளாவையும் இணைக்கும் கொல்லம் – திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தஞ்சாவூர் குளத்தில் நேற்று அதிகாலை 4 மணிக்கு திடீரென உடைப்பு ஏற்பட்டது.

இதனால் செங்கோட்டை வழியாக செல்லும் கொல்லம்-திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலை மற்றும் செங்கோட்டையிலிருந்து இலத்தூர் செல்லும் சாலை, இலஞ்சியில் இருந்து குத்துக்கல்வலசை செல்லும் சாலை ஆகிய 3 சாலைகளின் வழியாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. கேரளா மாநிலத்தில் இருந்து வரும் கனரக லாரிகள், அரசு பேருந்துகள், ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் செங்கோட்டைக்கு மேல்புறம் வரிசையாக சாலையோரங்களில் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டது.

தொடர்ந்து காலை 10 மணிக்கு மேல் வெள்ள நீர் படிப்படியாக குறைந்ததையடுத்து வாகனங்கள் பண்பொழி சாலை வழியாக செல்ல அனுமதிக்கப்பட்டது. செங்கோட்டையிலிருந்து இலத்தூர் செல்லும் சாலையில் வெள்ள நீர் படிப்படியாக குறைந்ததையடுத்து மதியம் 12 மணிக்கு மேல் வாகனங்கள் செல்ல துவங்கியது. தூத்துக்குடியிலும் நேற்றுமுன்தினம் காலை தொடங்கி நேற்று காலை வரையிலும் விட்டுவிட்டு மழை தொடர்ந்து பெய்தது. இதனால் மாநகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.

குடியிருப்பு பகுதிகளிலும் மழை நீர் சூழ்ந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் பல கிராமங்களில் விடிய, விடிய மழை பெய்தது. கோவில்பட்டியில் 36.4 செ.மீ, விளாத்திகுளத்தில் 18.6 செ.மீ, எட்டயபுரத்தில் 17.4 செ.மீ, கழுகுமலையில் 16.8 செ.மீ, ஸ்ரீவைகுண்டத்தில் 14.5 செ.மீமழை பதிவானது. இடை விடாத மழை காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.

மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அணைகளில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் திறக்கப்பட்டாலும், கட்டாற்று வெள்ளம் மற்றும் மாநகர பகுதிகளில் வெளியேறும் நீர் காரணமாக ஆற்றில் ஒரு லட்சம் கனஅடியை தாண்டி வெள்ளநீர் செல்கிறது. நெல்லை மாநகரில் தாமிரபரணி ஆற்றை தொட்டுவிடும் அளவிற்கு வெள்ளத்தை காண முடிகிறது. பல இடங்களில் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் செல்கிறது.

நெல்லை மாநகர பகுதிகளில் ஆற்றோரங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதோடு, வெள்ளத்தை வேடிக்கை பார்க்க வருவோரை அவர்கள் எச்சரிக்கை விடுத்து வெளியேற்றி வருகின்றனர். கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடியில் 10 மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை முதல் பரவலாக சாரல் மழை பெய்தது. பின்னர் மதியம் வெயில் அடித்தது. இரவில் சாரல் மழை விட்டு விட்டு மாவட்டம் முழுவதும் பெய்தது.

அதேநேரம் குமரி மலைப்பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை கொட்டியது. இதனால் மலையில் உள்ள நீரோடைகள் மூலம் ஆறுகள் மற்றும் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. நேற்று காலையிலும் கனமழை தொடர்ந்து பெய்தது. இதனால் கோதையாற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு மோதிரமலை- குற்றியாறு தற்காலிக பாலம் அடித்து செல்லப்பட்டது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பும் இதே தற்காலிக பாலம் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டு, போர்க்கால அடிப்படையில் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது. தற்போது 2வது முறையாக துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், மலை கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.

இதேபோல், மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களில் கனமழை கொட்டியது. இதனால் வைகையாறு, அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. போடிமெட்டு மலைச்சாலையில் பாறை உருண்டதால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ஜேசிபி மூலம் பாறைகளை அப்புறப்படுத்தினர். இதையடுத்து போக்குவரத்து சீரானது. வீடுகள், படகுகள் சேதமடைந்தன. மழைநீரில் மூழ்கி பயிர்கள் நாசமானது. பழநி – உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் மரம் விழுந்ததால் சுமார் 3 மணி நேரம் இச்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டன.

* சுவர் இடிந்து சிறுமி பலி
பரமக்குடி அருகே உள்ள மேலாய்க்குடி யாதவர் குடியிருப்பை சேர்ந்தவர் பால்ராஜ் (42). விவசாயி. மனைவி ஜெயலட்சுமி. 2 மகள்களுடன் மண் வீட்டில் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு வீட்டில் ஜெயலட்சுமி, அவரது சகோதரி மற்றும் 2 மகள்கள் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது பெய்த கனமழையால், பாத்ரூம் செல்ல எழுந்த இளைய மகள் கீர்த்திகாவின் (5) மீது வீட்டுச்சுவர் இடிந்து விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். ஜெயலட்சுமி உட்பட மற்ற 3 பேரும் காயமின்றி உயிர்தப்பினர்.

* குற்றால அருவிகளில் 32 ஆண்டுக்கு பின் கடும் வெள்ளப்பெருக்கு
தென்காசி மாவட்டத்தில் பெய்த கனமழையால் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி ஆகிய அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஐந்தருவில் 2 அருவிகளாக மாறி தண்ணீர் கொட்டுகிறது. மெயின் அருவியே தெரியாத அளவுக்கு ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ளம் சிற்றாறு அற்றில் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 1992ம் ஆண்டுக்கு குற்றாலத்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது இதுவே முதல்முறை.

* டெல்டாவில் 25,000 ஏக்கர் சம்பா மூழ்கியது 1.50 லட்சம் மீனவர்கள் முடக்கம்
நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. 3வது நாளாக நேற்றுமுன்தினம் இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது போல் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. அத்தியாவசிய தேவைகளின்றி மக்கள் வெளியில் வராமல் வீடுகளில் முடங்கினர்.

டெல்டாவில் சுமார் 1.50 லட்சம் மீனவர்கள் 3வது நாளாக நேற்று கடலுக்கு செல்லவில்லை. நாகப்பட்டினம் மாவட்டத்தில் 15,000 ஏக்கர், மயிலாடுதுறையில் 5,000 ஏக்கர், திருவாரூரில் 2000 ஏக்கர், தஞ்சாவூரில் 1500 ஏக்கர், திருச்சியில் 1500 ஏக்கர் என மொத்தம் 25,000 ஏக்கர் சம்பா பயிரில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். திருச்சியில் கடந்த 2 நாளாக இடைவிடாமல் மழை கொட்டி வருகிறது. இதனால் மாநகரில் 300க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.

* மீனாட்சி அம்மன் கோயிலில் மழைநீர்
மதுரை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்றும் தொடர்ந்து மழை விட்டு, விட்டு பெய்தது. குறிப்பாக நேற்று அதிகாலை முதல் மதியம் வரை மழை கொட்டி தீர்த்தது. இதனால், மீனாட்சி அம்மன் கோயில் பகுதியில் மேற்கு சித்திரை வீதி, வடக்கு சித்திரை வீதிகளில் முழங்கால் அளவிற்கு மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேற்கு சித்திரை வீதியில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர் மேற்கு கோபுரம் வழியாக கோயிலுக்குள் புகுந்தது.

கோயிலுக்குள் புகுந்த மழைநீர் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நடைபெறும் மண்டபமான ஆடி வீதி பகுதியில் மழைநீர் தேங்கியது. மேற்கு சித்திரை வீதியில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீரில், காலணி வைப்பகம் மற்றும் அதன் அருகில் வைக்கப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட காலணிகள் மழைநீரில் அடித்து செல்லப்பட்டன. தரிசனம் முடித்து வந்த பக்தர்கள் தங்களது காலணிகளை தேடி அலைந்தனர்.

* அமராவதி ஆற்றில் வெள்ளம்
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமைந்துள்ள அமராவதி அணை 90 அடி உயரம் கொண்டது.நேற்று முன்தினம் இரவு மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் அமராவதி அணைக்கு நீர்வரத்து ஒரே நேரத்தில் திடீரென அதிகரித்தது. நள்ளிரவு 12 மணிக்கு 5 ஆயிரம் கன அடி வந்து கொண்டு இருந்த நிலையில், மேலும் நீர்வரத்து அதிகரித்து 10 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது. இதனால் இந்த ஆண்டு 4வது முறையாக அணை நிரம்பியது.

நீர்வரத்தை கண்காணித்து வந்த நீர்வளத்துறை அதிகாரிகள் உடனடியாக அணையின் மேல் மதகில் 6 ஷட்டர்களை திறந்துவிட்டு உபரிநீர் முழுவதையும் வெளியேற்றினர். நள்ளிரவு 1 மணிக்கு 18 ஆயிரம் கன அடி, 1.30 மணிக்கு 25 ஆயிரம் கன அடி, நேற்று காலை 6.30 மணிக்கு 26 ஆயிரம் கன அடி, 7 மணிக்கு 30 ஆயிரம் கன அடி, 8 மணிக்கு 36 ஆயிரம் கன அடி என தொடர்ந்து உபரிநீர் அதிகமாக வெளியேற்றப்பட்டது. இதன் காரணமாக அமராவதி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமராவதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கரையோர பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த வாழை, மக்காச்சோளம், கரும்பு உள்ளிட்ட பயிர்கள் சேதமாகின. உடுமலை அருகே திருமூர்த்திமலையில் புகழ்பெற்ற அமணலிங்கேஸ்வரர் கோயில், பஞ்சலிங்க அருவி உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு திருமூர்த்திமலையில் பெய்த கனமழை காரணமாக பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அமணலிங்கேஸ்வரர் கோயிலை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் கோயிலுக்கு பக்தர்கள் வரவும் நேற்று தடை விதிக்கப்பட்டுள்ளது.

* ஏற்காடு மலைகிராமங்கள் இருளில் மூழ்கியது
சேலம் மாநகரில் தொடர் மழையால், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மாநகரை விட மாவட்ட பகுதிகளில், மழையின் தாக்கம் அதிகளவில் இருந்தது. குறிப்பாக மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமான ஏற்காட்டில், பலத்த மழையால் கடும்குளிர் வீசியது. பனிமூட்டமும் அதிகமாக காணப்பட்டது. இதனால் வாகனங்கள் அனைத்தும் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு, ஏற்காடு மலைச்சாலைகளில் பயணித்தன. மலைப்பாதையில் பல இடங்கள் சேறும், சகதியுமாக காணப்பட்டது.

மலைகிராமங்களில் கனமழையால் ஆங்காங்கே மரங்கள் முறிந்து, மின்கம்பங்களின் மீது சாய்ந்து விழுந்தது. இதனால் 25க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கியது. கெங்கவல்லியில் தரைப்பாலம் மழையில் அடித்துச் செல்லப்பட்டதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். நாமக்கல் மாவட்டத்தில், 34.8 செ.மீ மழை பதிவானது.

இங்கும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால், மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். கொல்லிமலையில் பெய்த மழையால், ஆகாயகங்கை அருவிக்கு நீர்வரத்து அதிகரித்தது. கிராமப்புறங்களில் பல இடங்களில் பயிர்கள் நீரில் மூழ்கியது. நகர்ப்புறங்களில் சாலைகள் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இந்த மாவட்டங்களில் மழையின் தாக்கம் இருந்த போதும், பாதிப்புகள் அதிகமில்லை.

* வடமாவட்டங்களில் பரவலான மழை
கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரத்தில் மழை தொடர்ந்து நீடிப்பதால் விளை நிலங்கள் மீண்டும் பாதிக்கப்பட்டு உள்ளன. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதித்தது. விருத்தாசலத்தில் பெய்த தொடர் மழையால் பஸ் நிலையம் மட்டுமின்றி தாழ்வான கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. அங்குள்ள வீடுகளில் மழைநீர் புகுந்தது. பெண்ணாடம், வடலூரிலும் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. திண்டிவனம் அடுத்த கீழ்காரணை கிராம தரைபாலத்தில் காட்டாற்று வெள்ளத்தால் 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

சாத்தனூர் அணை திறப்பால் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் 35 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. உளுந்தூர்பேட்டை மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் விடியவிடிய கனமழை பெய்தது. திருக்கோயிலூர், ரிஷிவந்தியம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. கல்வராயன்மலையில் பெய்த கனமழையால் கோமுகி அணையில் இருந்து உபாிநீர் வெளியேற்றப்பட்டதால் பாதுகாப்பு கருதி ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம் முழுவதும் பரவலாக கனமழை பெய்தது. குறிப்பாக நகர பகுதியில் மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது. சாத்தனூர் அணையில் நேற்று மாலை நிலவரப்படி 7 ஆயிரம் கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதேபோல் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது. இதன் காரணமாக ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்கிறது.

மாவட்டத்தில் மழையால் 500 ஹெக்டர் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி சேதம் அடைந்துள்ளது. ஏற்கனவே பெஞ்சல் புயல் காரணமாக கனமழையில் பயிர்கள் நாசம் அடைந்த நிலையில், தற்போது இந்த மழையால் மேலும் பயிர்கள் சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ராணிப்பேட்டையில் நெமிலி, அரக்கோணத்தில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது.

விளைநிலங்கள் சுமார் 600 ஏக்கர் அளவில் பாதிக்கப்பட்டது. ஆற்காடு அருகே மேல்விஷாரத்தில் தொடர் மழையால் ஏற்பட்ட மண் சரிவில் ராட்சத பாறை சரிந்து விழுந்தது. இதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. பாறையை அப்புறப்படுத்தும் பணியில் மேல்விஷாரம் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். இதுபோன்று திருப்பத்தூர், வேலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.

The post தென்மாவட்டங்களில் கொட்டித்தீர்த்த கனமழை: மாஞ்சோலை ஊத்தில் 50 செ.மீ, தாமிரபரணியில் சீறிப்பாயும் வெள்ளம் appeared first on Dinakaran.

Read Entire Article