சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதி, 140வது வார்டில் ரூ.5.10 கோடி மதிப்பீட்டில் 1.54 கி.மீ நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணி தொடக்கம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்கள்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (13.03.2025) சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதி, கோடம்பாக்கம் மண்டலம், 140வது வார்டில், அரங்கநாதன் சப்வே அருகில் உள்ள கோவிந்தன் சாலையில் ரூ.5.10 கோடி மதிப்பீட்டில் 4 தெருக்களுக்கு 1.54 கி.மீ நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணியினைத் தொடங்கி வைத்தார். பிறகு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
சென்னை மாநகரில் தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்றபிறகு, எங்கெயெல்லாம் மழைநீர் தேக்கம் இருக்கின்றதோ அந்தப் பகுதிகளை எல்லாம் கண்டறிந்து, புதிய மழைநீர்வடிகால்வாய்களை கட்டுவதற்கு, வெள்ள தடுப்பு நடவடிக்கைகளை முழுமையாக மேற்கொள்வதற்கு, உயர்மட்ட ஆலோசனை குழு நியமிக்கப்பட்டது. ஓய்வு பெற்ற IAS அலுவலர் பெருமதிப்பிற்குரிய திருப்புகழ் தலைமையில் அமைக்கப்பட்ட குழு பல்வேறு பரிந்துரைகளை வழங்கியது.
அக்குழு வழங்கிய பரிந்துரைகளின் அடிப்படையில் சென்னை மாநகரில் ஏராளமான பணிகள் நடைபெற்றது. அதாவது 510 கி.மீ தூரத்திற்கான மழைநீர் வடிகால்வாய் பணிகள் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் ரூ.2,375 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று முடிந்தது. அதுமட்டுமல்லாமல் ரூ.510 கோடி செலவில் 151 கி.மீ தொலைவில் கோவளம் பேசின் பகுதியில் ஜெர்மன் வங்கி நிதியுதவியுடன் மழைநீர் வடிகால்வாய் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. நான் ஏற்கெனவே சொன்னது போல் 20 செ.மீ அளவிற்கு மழை பொழிந்தால் அதனை தாங்கும் அளவிற்கு மழைநீர் வடிகால் சென்னையில் இருக்கின்றது.
அதனை மீறி ஒரே நாளில் 35 செ.மீ அளவிற்கு மழை பொழிந்தால் மட்டுமே பாதிப்புகள் இருக்கும். இது சென்னையில் மட்டுமல்ல உலகில் வளர்ந்த நாடுகள் என்று கண்டறியப்பட்டுள்ள அமெரிக்கா, இலண்டன் போன்ற நாடுகளில் உள்ள மாநகரில் கூட பெருமழையின் போது பாதிப்புகள் எதிர்கொள்ள வேண்டிய சூழல் இருந்துக் கொண்டிருக்கிறது. ஆனால் தமிழ்நாடு முதலமைச்சர் எடுத்த விரைவான நடவடிக்கைகளின் காரணமாக சென்னையில் மழைநீர் பாதிப்புகள் அதிக அளவில் தவிர்க்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சைதாப்பேட்டை பகுதியில் மழைநீர் பாதிப்புகள் ஏற்கெனவே இருந்தது. சுப்பிரமணிய சாலை, திருவள்ளுவர் தெரு, ஜோதியம்மாள் நகர், ஜோதிராமலிங்கம் நகர் போன்ற பல்வேறு பகுதிகளில் சிறு அளவிலான மழை பொழிவிற்கு பெரிய அளவிலான பாதிப்புகள் இருந்தது. தற்போது அந்த பாதிப்புகள் 100% தடுக்கப்பட்டுள்ளது. தற்போது கோவிந்தன்சாலை, வடிவேல்புரம், கோடம்பாக்கம் ரோடு, கேஆர் கோவில் தெரு போன்ற பகுதிகளில் அசோக்நர் அவென்யூ சாலைகளிலிருந்து வருகின்ற மழைநீர், புஷ்பாவதி தெருவில் இருக்கின்ற கால்வாயில் ஏற்பட்டிருக்கின்ற அடைப்புகளின் விளைவாக பெரிய பாதிப்புகள் கடந்த 2 ஆண்டுகளாக இருந்தது.
தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலோடு, அந்த பாதிப்புகள் அகற்றும் பணிகள் நடைபெற தொடங்கி கேயார் தெருவில் 520 மீ தூரத்திற்கும், சம்வென்யூ தெருவில் 220 மீ தூரத்திற்கும், எல்லையம்மன் கோவில் தெருவில் 455 மீ தூரத்திற்கும், கோவிந்தன் சாலையில் 345 மீ தூரத்திற்கும், ஆக மொத்தம் 4 எண்ணிக்கையில் 1.54 கி.மீ தூரத்திற்கு ரூ.5.10 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால்வாய் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டிருக்கிறது. அதேபோல் கோவிந்தன் சாலை பகுதியில் 432 மீ தூரத்திற்கும், கலைஞர் தெரு, குமரன் தெரு போன்ற பகுதிகளில் 441 மீ தூரத்திற்கும், கோவிந்தன் சாலை இன்னொரு பகுதியில் 445 மீ தூரத்திற்கும், ரெட்டிக்குப்பம் சாலையில் 4.5 மீ தூரத்திற்கும் என 1.47 கி.மீ தூரத்திற்கும் என ரூ.6.98 கோடி செலவில் புதிய மழைநீர் வடிகால் பணிகள் கட்டுவதற்கு ஒப்பந்தம் கோரப்பட்டிருக்கிறது.
மிக விரைவில் அதற்கும் பணி ஆணைகள் தரப்பட்டு இந்தப் பகுதியில் அடுத்த வடகிழக்கு பகுதியில் மழை பாதிப்பே இல்லை என்கின்ற நிலை உருவாக இருக்கிறது. ஆக இன்று 1.54 கி.மீ தூரத்திற்கு ரூ.5.10 கோடி மதிப்பிலான மழைநீர் வடிகால்வாய்கள் கட்டும் பணி தொடங்கப்பட்டிருக்கிறது. 1.74 கி.மீ தூரத்திற்கு ரூ.6.98 கோடி மதிப்பிலான பணிகளுக்கு ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளது. மிக விரைவில் இந்தப் பணிகளும் தொடங்கப்பட்டு இந்தப் பகுதியில் மழைநீர் பாதிப்புகள் இல்லாத நிலை ஏற்படவிருக்கிறது.
சென்னையில் பெரிய அளவில் மழை பாதிப்புகளைச் சந்தித்த செம்மஞ்சேரி, வேளச்சேரி, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், உள்ளகரம், புழுதிவாக்கம் போன்ற பல்வேறு பகுதிகளில் மழைநீர் பாதிப்புகளிலிருந்து காப்பாற்றப்பட்டு இருக்கிறது. மேலும் செங்கல்பட்டு மாவட்டத்திலிருக்கும் 50 ஏரிகளிலிருந்து வரும் உபரி நீர் நாராயணபுரம் ஏரியில் கலக்கும்.
எனவே நாராயணபுரம் ஏரியிலிருந்து பெருக்கெடுத்து வரும் உபரிநீர் நான் ஏற்கெனவே சொல்லியிருக்கும் மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, உள்ளகரம், புழுதிவாக்கம் போன்ற பல்வேறு பகுதிகளை பாதிக்கும் நிலை இருந்தது. தமிழ்நாடு துணை முதலமைச்சர் 2 முறை நேரிடையாக இப்பகுதிகளுக்கு வருகை புரிந்து பாதிப்புகளை கண்டறிந்து நாராயணபுரம் ஏரியிலிருந்து இணைப்புக் கால்வாய்களை 1000 கனஅடி நீர் வெளியேற்றிடும் வகையில் பிரம்மாண்டமான கால்வாய்களை அமைக்க அறிவுறுத்தினார்கள். கடந்த மழைக்கு தற்காலிகமாக கால்வாய் கட்டப்பட்டது. இந்த வருட பருவ மழைக்கு நிரந்தமாக கால்வாய் கட்டும் பணிகள் முடிவுற்றபிறகு இந்தப் பகுதிகளில் ஏற்படும் மழைநீர் பாதிப்புகள் முழுமையாக நீக்கப்படவிருக்கிறது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலக்குழுத் தலைவர் எம்.கிருஷ்ணமூர்த்தி, மாமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீதர், சுப்பிரமணி, மண்டல அலுவலர் முருகேசன், செயற்பொறியாளர் இனியன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
The post ரூ.5.10 கோடி மதிப்பீட்டில் 1.54 கி.மீ நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன் appeared first on Dinakaran.