ஓசூர்: தென்பெண்ணை ஆற்று ரசாயன கழிவுநீரால் வளரும் புளூ டைசி மலர்களுக்கு, வெளி மாநிலங்களில் நல்ல வரவேற்பு உள்ளதால், மானியம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூர் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள விவாசாயிகள் பீன்ஸ், முட்டைகோஸ், காலிபிளவர் போன்ற ஆங்கில காய்கறிகள், தக்காளி மற்றும் கீரை வகைகளை அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர். அதே போல் சாமந்தி, செண்டுமல்லி, ரோஜா போன்ற மலர்களையும் சாகுபடி செய்கின்றனர்.
தென்பெண்ணை ஆறு வழியாக செல்லும் ரசாயன கழிவுநீரை பயன்படுத்தி, விவசாயம் செய்யும் போது, காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்படுகிறது என்பதால், காய்கறிகள் சாகுபடி செய்யும் பெரும்பாலான விவசாயிகள், கிணற்று பாசன தண்ணீரை பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், தென்பெண்ணை ஆற்று பகுதிகளையொட்டி உள்ள சில விவசாயிகள், தென்பெண்ணை ஆற்றில் வரும் ரசாயனம் கலந்து நீரை நேரடியாக பயன்படுத்தி, திறந்த வெளியில் புளூ டைசி எனும் மலரை உற்பத்தி செய்கின்றனர்.
இந்த மலர்கள் அலங்கார மலர்களுடன் சேர்த்து வைத்து, திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்வு, கோயில் திருவிழாக்களுக்கும், விஐபிகளை வரவேற்க மலர்கொத்து தயாரிக்கவும் பயன்படுகிறது. பாகலூர் பகுதியில் மட்டும் கழிவுநீரை பயன்படுத்தி, சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் புளூ டைசி மலர்களை விவசாயிகள் உற்பத்தி செய்கின்றனர். இந்த மலருக்கு வெளிமாநிலங்களிலும் அதிக வரவேற்புள்ளதால், இந்த மலரை அதிக பரப்பில் சாகுபடி செய்வதற்கு அரசு மானியம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: பாகலூர் வழியாக செல்லும் தென்பெண்ணை ஆற்றில் அதிகப்படியான தொழிற்சாலை ரசாயன கழிவுநீர் துர்நாற்றத்துடன் செல்வதால், இந்த தண்ணீரில் சாகுபடி செய்யும் நெல்லை அறுவடை செய்து, அரிசியை கொண்டு உணவு சமைத்தால், 2 மணி நேரத்தில் சாதம் கெட்டு விடும். அதே போல், காய்கறிகளும் நன்கு விளையாது. விவசாயத்திற்கும், கால்நடைகள் மற்றும் மனிதர்களுக்கும் பயனில்லாத இந்த ரசாயனம் கலந்த தண்ணீர், வீணாக ஆற்றில் கலக்கிறது.
ஆனால், ஆற்றோர பகுதியில் உள்ள சில விவசாயிகள் ரசாயன கழிவுநீர் மூலம், அலங்காரத்துக்கு பயன்படுத்தப்படும் புளூ டைசி மலர்களை அதிகளவில் பயிரிடுகின்றனர். இந்த மலர் ரசாயன கழிவு நீரில் நன்கு வளர்கிறது. இந்த மலர்கள் ஆந்திரா மற்றும் டெல்லி போன்ற வெளி மாநிலங்களுக்கு தினமும் 5 ஆயிரம் கட்டு அனுப்பப்படுகிறது. திருமண நாட்களில் 20 ஆயிரம் கட்டுகள் வரை அனுப்பப்படுகிறது. ஒரு கட்டு ரூ.60 முதல் ரூ.150 வரை விற்பனை செய்யப்படுகிறது.
ஆண்டு முழுவதும் இந்த மலருக்கு நல்ல வரவேற்பு உள்ளதால் புளூ, மஞ்சள், வெள்ளை ஆகிய மூன்று வண்ணங்களில் டைசி மலர்களை உற்பத்தி செய்து வருகின்றனர். குறிப்பாக புளூ டைசிக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. ஆற்று பகுதியையொட்டி உள்ள விவசாயிகள், இந்த மலர் சாகுபடி குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாமல், கிணற்று பாசனத்தையே நம்பி உள்ளனர்.
வீணாக செல்லும் ரசாயன கழிவுநீர் மூலம் டைசி மலர்கள் சாகுபடி செய்வது குறித்து விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறையினர் விழிப்புணர்வு வழங்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு 80 ஆயிரம் நாற்று தேவைப்படும். ஒரு நாற்று ரூ.3க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு ஏக்கர் நடவு செய்து பராமரிக்க ரூ.1.25 லட்சம் வரை செலவாகிறது. எனவே, வீணாக ஆற்றில் கலக்கும் ரசாயன கழிவு நீர் மூலம் புளூ டைசி மலர்கள் உற்பத்தி செய்ய, அரசு மானியம் வழங்கி ஊக்கப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
The post தென்பெண்ணை ஆற்று ரசாயன கழிவுநீரால் வளரும் புளூ டைசி மலர்களுக்கு வெளிமாநிலங்களில் வரவேற்பு: மானியம் வழங்க விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.