மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான காரமடை, மருதூர், தாயனூர், தோலம்பாளையம், வெள்ளியங்காடு, நெல்லித்துறை, ஓடந்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாழை சாகுபடி அதிகளவில் நடந்து வருகிறது. வாழைக்கு அடுத்தபடியாக தென்னை சாகுபடியும் பெரிய அளவில் நடந்து வருகிறது. மேற்கூறிய கிராமங்கள் வனப்பகுதியை ஒட்டி அமைந்திருப்பதால் காட்டு யானை, மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக காட்டு யானைகளால் அதிகளவில் வாழை, தென்னை உள்ளிட்ட பயிர்கள் பெரிய அளவில் சேதமடைந்து வருகிறது. இதனால் செலவு செய்து சாகுபடியில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் பெரிய அளவில் நஷ்டம் அடைய வேண்டிய சூழலும் நிலவுகிறது.
இதனைத் தவிர்ப்பதற்காக தோட்டக்கலை மற்றும் வேளாண் துறை அலுவலர்கள் இந்தப் பகுதி விவசாயிகளுக்கு ஒரு அற்புதமான யோசனையைத் தந்திருக்கிறார்கள். வேறொன்றுமில்லை. தேன் வளர்ப்புதான் அது. அலுவலர்களின் ஆலோசனைப்படி தற்போது இந்தப் பகுதிகளில் வசிக்கும் பல விவசாயிகள் சமீப காலமாக தங்களது விவசாயத் தோட்டங்களில் அதிக அளவில் தேன் பெட்டிகளை வைத்து தேனீ வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக தென்னை மற்றும் வாழைத்தோப்புகளில் ஒரு ஏக்கருக்கு 10 பெட்டிகள் வீதம் ஆங்காங்கே போதிய இடைவெளி விட்டு தேனீ பெட்டிகளை வைத்து தேன் சேகரிக்கிறார்கள். இவ்வாறு தேனீக்களை வளர்ப்பதன் மூலம் வாழை மற்றும் தென்னை மரங்களில் உள்ள பூக்களில் அமரும் தேனீக்களால் இயற்கையான முறையில் மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது. இதன் காரணமாக தென்னை, வாழைத் தோப்புகளில் மகசூல் அதிகரிக்கிறது.
இரவு நேரங்களில் இடைவிடாமல் தேனீக்களின் எழுப்பும் ரீங்காரத்தை கேட்கும் யானைகள் அந்த பக்கம் வருவதையே தவிர்த்து வேறு இடங்களுக்கு சென்று விடுகின்றன. தேனீக்களின் ரீங்காரம் யானைகளுக்கு பிடிக்காது என்பதோடு காதினுள் நுழைந்து விடும் என்ற அச்சத்தில் தேனீக்கள் உள்ள இடத்திற்கு யானைகள் வராமல் ஓட்டம் பிடிக்கின்றன. இதனால் பயிர் சேதம் என்பது பெரியளவில் தவிர்க்கப்படுகிறது. ஒரு ஏக்கர் தோட்டத்தில் 10 பெட்டிகள் வைத்து தேனீக்களை வளர்த்து வந்தால் மாதம் ஒரு லிட்டருக்கும் அதிகமான தேன் கிடைக்கிறது. இதன் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானமும் கிடைக்கிறது. மகசூல், அதிகரிப்பு, யானை விரட்டியடிப்பு, சுத்தமான தேன் சேகரிப்பு என 3 அனுகூலங்கள் கிடைப்பதால் மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதியில் தேனீ வளர்ப்பு மென்மேலும் அதிகரித்து வருகிறது.
The post தென்னை, வாழையை கபளீகரம் செய்யும் யானைகளை விரட்டியடிக்க சூப்பர் ஐடியா! appeared first on Dinakaran.