சென்னை: “தமிழ்நாட்டின் எந்த உரிமையைப் பெற பாஜகவுடன் கூட்டணி வைத்தார் என்று சொல்ல எதாவது பதில் வைத்திருக்கிறாரா? தனது மகனுக்காகவும் சம்பந்திக்காகவும் பாஜகவோடு கூட்டணி வைத்துவிட்டு, பாஜகவின் செய்தி தொடர்பாளராக பழனிசாமி மாறுவதற்குப் பதில் கமலாலயத்தின் ஒரு மூலையிலேயே அதிமுகவின் அலுவலகத்தை அமைத்துக் கொள்ளலாம்,” என்று தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரெய்டைப் பார்த்து யாருக்குப் பயம் என பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார். 2031 சட்டமன்றத் தேர்தல் வரையில் பாஜகவோடு கூட்டணி இல்லை எனப் பேசிய வீராதி வீரர் யார்? கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக பாஜக கூட்டணி கிடையாது என விதவிதமான மொழிகளில் நீங்கள் பேசிய வீடியோக்கள் இன்றைக்கும் ட்ரோல் ஆகிக் கொண்டிருக்கிறது. அது உங்கள் முகத்திரையைக் கிழிக்கும் கண்ணாடிதானே, அது உங்களைப் பார்த்துத்தானே சிரிக்கிறது.