தென்னை மரம் ஏறி தேங்காய் வெட்டும் கருவி! :குமரி உழவரின் அசத்தல் முயற்சி

2 months ago 9

தற்போது விவசாயிகள் பலர் விஞ்ஞானிகளாக மாறி வருகிறார்கள். குமரி மாவட்டம் சித்தன்தோப்பு பகுதியை சேர்ந்த விவசாயியும், பொறியாளருமான பெனின்லால் கிங்சிலி என்பவர் தென்னை மரம் ஏறுவதற்கு ஒரு புதிய இயந்திரத்தை வடிவமைத்துள்ளார். விவசாயிகள் தற்போது பயன்படுத்தி வரும் பல கருவிகள் ஆட்கள் ஏறி தேங்காய் வெட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால் இவர் வடிவமைத்துள்ள கருவி ஆட்களின் தேவை இல்லாமல் தாமே மரத்தில் ஏறி, தாமே தேங்காய் வெட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. சித்தன்தோப்பில் உள்ள பெனின்லால் கிங்சிலியின் தோட்டத்தில் அவரைச் சந்தித்தோம். நம்மை வரவேற்றுப் பேசத் தொடங்கினார். “ சென்னையில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துவிட்டு, சிங்கப்பூரில் மெடிக்கல் சம்பந்தமான கருவிகளை தயாரிக்கும் ஒரு கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தேன். சொந்த ஊரில் இருக்க வேண்டும் என்ற ஆசையில் 2006ல் சிங்கப்பூரில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பினேன். பின்னர் பெங்களூர் மற்றும் சென்னையில் வேலை பார்த்தேன். சிங்கப்பூரில் இருந்து ஊருக்கு வரும்போதே தனியாக ஒரு கம்பெனி தொடங்க வேண்டும் என்றும், அது விவசாயத்துக்கு பயன்படும் கருவிகள் தயாரிக்கும் கம்பெனியாக இருக்க வேண்டும் என்றும் விரும்பினேன். நான் சிங்கப்பூரில் வேலை செய்தபோது ஜப்பான், சீனா போன்ற நாடுகளுக்குச் சென்றிருக்கிறேன்.

அங்கு விவசாயத்திக்கு இயந்திரங்கள்தான் அதிகமாக பயன்படுகின்றன. இந்தியாவில் அந்த அளவுக்கு இயந்திரங்கள் இல்லை. சீனா போன்ற நாடுகளில் 500 ஏக்கர், ஆயிரம் ஏக்கர் நிலங்களில் மொத்தமாக விவசாயம் நடக்கும். நம் ஊரில் சின்ன நிலப்பரப்பில்தான் விவசாயம் நடக்கிறது. அதற்கு ஏற்றவாறு என்ன கருவி கண்டுபிடிக்கலாம் என யோசித்தேன். அப்போது தென்னை, பனை மரம் ஏறுவதற்கான கருவி கண்டுபிடிக்க முடிவு செய்தேன். குறிப்பாக மரம் ஏறுவது ஒரு திறமை. கடந்த காலத்தில் தென்னை மரம் ஏறுபவர்கள் காலில் தளப்பு போட்டு (கயிறு கட்டி) மரத்தில் தேங்காய் பறித்தனர். அதன்பிறகு வந்த தலைமுறைக்கு அப்படி மரம் ஏறும் திறமை குறைந்ததால் கேலிபர் என்ற கருவி வந்தது. இரும்பு கம்பிகள் போன்ற கேலிபரை மரத்தில் கட்டி தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறிப்பதை இப்போது அதிகமாக பார்க்கலாம். கேலிபர் மூலம் அனைவரும் தென்னை மரம் ஏற முடியாது. அதிலும் சிறிது திறமை தேவைப்படுகிறது.

சாதாரண மனிதர்கள் தென்னை மரத்தில் தேங்காய் பறிக்கும் விதமாக ஆட்களே மரத்தில் ஏறாமல் தேங்காய் பறிக்கும் கருவி கண்டுபிடிக்க வேண்டும் என நான் முடிவு செய்தேன். பேட்டரியில் இயங்கும் தென்னை மரம் ஏறும் கருவி கண்டுபிடிக்க வேண்டும் என திட்டமிட்டேன். 2017 ஜனவரியில் இருந்து தென்னை மரம் ஏறும் கருவியை தயாரிக்கும் முனைப்பில் இறங்கினேன். திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை வீட்டில் இருந்து கருவிக்கான டிசைன் போடுவேன். சனி, ஞாயிறு சென்னை சென்று கருவிக்கான பாகங்களை சேகரிப்பேன். அந்த பாகங்களை ஊருக்கு வரவழைத்து அசம்பிள் செய்து சோதனை செய்வேன். பலக்கட்ட முயற்சிகள் செய்தும் தென்னை மரத்தில் கருவியை ஏற்றமுடியவில்லை. பல கட்ட முயற்சிக்கு பிறகு 2018 நவம்பரில் முதன் முதலாக ஒரு கருவியை தென்னை மரத்தில் ஏற்றி சோதனைச் செய்தேன். தேங்காய் வெட்டும் கிளைம்பர், டிராலி என இரு வகை கருவிகளை 3 கட்ட முயற்சிக்கு பிறகு தயாரித்தேன். இதற்காக ₹1 கோடி வரை செலவு செய்தேன். தேங்காய் வெட்டும்போது டிராலியில் எடுத்துச் சென்றுதான் கிளைம்பரை தென்னை மரத்தில் மாட்டுவோம். கிளைம்பர் மரத்துக்கு மேலே சென்று தேங்காய் வெட்டும். வெட்டப்பட்ட தேங்காய் குலை கிளைம்பருக்கு மேலேயோ, கீழே நிற்கும் டிராலி மீதோ விழுந்தாலும் எதுவும் ஆகாத அளவுக்கு தரமான உலோகத்தில் வடிவமைத்துள்ளோம். கிளைம்பர் மரத்தில் ஏறி இறங்க ஒரு மோட்டார், பொசிசன் செய்ய 6 மோட்டார்கள், வெட்டும் கட்டருக்கு ஒரு மோட்டார் என தென்னைமரம் ஏறும் கருவியில் மொத்தம் 8 மோட்டார்கள் உள்ளன. இந்த கருவியை கொண்டுசெல்லும் டிராலியில் ஒரு மோட்டார் இருக்கிறது
.
தேங்காய் வெட்டும் கருவியை தென்னை மரத்தில் ஏற்றுவதற்கு தற்போது ரிமோட்டைப் பயன்படுத்துகிறோம். தேங்காய் வெட்டுவதற்காக கருவியை ஒயர் மூலம் கட்டுப்படுத்துகிறோம். இந்த கருவி மார்க்கெட்டுக்கு வரும்போது அனைத்தும் ரிமோட்டில் கொண்டுவந்துவிடுவோம். கிளைம்பரில் 20 ஆம்ஸ் லித்தியம் அயன் பேட்டரியும், கட்டருக்கு 20 ஆம்ஸ் லித்தியம் அயன் பேட்டரியும் பயன்படுத்தி உள்ளோம். டிராலியை நாம் தள்ளிக்கொண்டு போகவேண்டாம். அதை இயக்கவும் காருக்கு பயன்படுத்தும் பேட்டரி பொருத்தி உள்ளோம். மரத்துக்கு மேல் ஏறும் கிளைம்பர் சுமார் 40 கிலோ எடை கொண்டது. அதை எடுத்துச்செல்லும் டிராலி 100 கிலோ எடை கொண்டது. சொந்தமாக தென்னந்தோப்பு வைத்திருப்பவர்கள் பயன்படுத்தும் வகையிலும், தேங்காய் வெட்டும் தொழில் செய்பவர்கள் பைக்கில் இந்த மிஷினை மாட்டி இழுத்துச் செல்லும் வகையிலும் தயாரித்துள்ளோம்’’ என்கிறார்.
தொடர்புக்கு:
பெனின்லால் கிங்சிலி: 95000 38378.

இந்தப் புதிய கருவி மூலம் தேங்காய் பறிக்கும்போது, மரத்தில் ஏற ஆட்கள் தேவைப்பட மாட்டார்கள். இந்தக் கருவியே மேலே ஏறி தேங்காய்களைப் பறித்து, சேகரித்துக்ெகாள்ளும்.

விவசாயிகள் இந்தக் கருவியைத் தாங்களே எளிமையாக இயக்கும் வகையிலும், தேங்காய் வெட்டும் தொழில் செய்பவர்கள் பைக்கில் மாட்டி இழுத்துச் செல்லும் வகையிலும் இந்தக் கருவி வடிமைக்கப்பட்டு இருக்கிறது.

 

The post தென்னை மரம் ஏறி தேங்காய் வெட்டும் கருவி! :குமரி உழவரின் அசத்தல் முயற்சி appeared first on Dinakaran.

Read Entire Article