தென்கொரியாவில் அதிபரை தொடர்ந்து இடைக்கால அதிபர் பதவிநீக்கம்

17 hours ago 1

சியோல்,

தென்கொரியாவில் கடந்த 3-ந்தேதி அதிபர் யூன் சுக் இயோல் திடீரென ராணுவ அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். இது தொடர்பாக தொலைக்காட்சியில் உரையாற்றிய யூன் சுக் இயோல், வட கொரிய கம்யூனிஸ்ட் படைகளின் அச்சுறுத்தல் காரணமாக தென் கொரியாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாக தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த அறிவிப்பிற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. பின்னர் மக்களின் கடும் எதிர்ப்பால் அவசர நிலையை தென்கொரிய அதிபர் வாபஸ் பெற்றார். அதனை தொடர்ந்து தென்கொரிய அதிபரை பதவிநீக்கம் செய்யும் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்தன.

ஆனால் அந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை ஆளுங்கட்சியினர் புறக்கணித்ததால், தீர்மானம் தோல்வி அடைந்தது. தொடர்ந்து 2-வது முறையாக அதிபருக்கு எதிரான பதவிநீக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் மொத்தமுள்ள 300 எம்.பி.க்களில் 204 பேர் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனையடுத்து அதிபர் யூன் சுக்-இயோல் பதவிநீக்கம் செய்யப்பட்டார். இடைக்கால அதிபராக பிரதமர் ஹான் டக்-சூவுக்கு நியமிக்கப்பட்டார்.

இதனிடையே தென்கொரிய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ள நிலையில், இடைக்கால அதிபராக நியமிக்கப்பட்டுள்ள ஹான் டக்-சூவை பதவிநீக்கம் செய்யும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த தீர்மானம் 192-0 என்ற அடிப்படையில் அதிகபட்ச ஆதரவை பெற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆளுங்கட்சி எம்.பி.க்கள் வாக்கெடுப்பை புறக்கணித்தனர். இதன்படி இடைக்கால அதிபர் ஹான் டக்-சூ பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

Read Entire Article