
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே இரட்டைகுளம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ் (40 வயது). இவர் கேரளாவில் சலூன் கடை வைத்துள்ளார். இவருடைய மனைவி மீனா (35 வயது). இவர்களது மகள் மானஷா (14 வயது). சுரண்டை சிவகுருநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு உடல்நலம் சரியில்லாமல் அடிக்கடி மயக்கம் வருவதாகவும், அதற்காக சிகிச்சை எடுத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று காலை மானஷா தனது வீட்டில் இருந்து சைக்கிளில் பள்ளிக்குச் சென்றார். அங்கு வகுப்பறையில் அமர்ந்திருந்தபோது திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆசிரியர்கள் சுரண்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து சுரண்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். பள்ளிக்குச் சென்ற மாணவி திடீரென மயங்கி விழுந்து இறந்தது சுரண்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.