
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே காணாமல் போன ஒன்பதாம் வகுப்பு மாணவன் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாம்பவர் வடகரை பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் பொன்ராம், அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று பள்ளி சென்ற பொன்ராம் இரவாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து சிறுவனை உறவினர்கள் தேடி வந்தனர்.
இந்த நிலையில் சிறுவன் பொன்ராம் சாம்பவர் வடகரை பொய்கை சாலையில் உள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். செல்போன் பார்ப்பதை பெற்றோர் கண்டித்ததால், மனமுடைந்து சிறுவன் பொன்ராம் கிணற்றில் குதித்து உயிரை மாய்த்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.