
அகமதாபாத்,
10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 34 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில், இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
அதில் மாலை 3.30 மணிக்கு அகமதாபாத்தில் நடைபெறும் 35வது லீக் ஆட்டத்தில் அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி, சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸை எதிர்கொள்கிறது. இந்த தொடரில் இதுவரை 6 லீக் ஆட்டங்களில் ஆடியுள்ள டெல்லி 5 வெற்றி, 1 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
அதேவேளையில் 6 ஆட்டங்களில் ஆடியுள்ள குஜராத் 4 வெற்றி, 2 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. கடந்த ஆட்டத்தில் ராஜஸ்தானை சூப்பர் ஓவரில் வீழ்த்திய டெல்லி வெற்றிப்பயணத்தை தொடரும் முனைப்புடன் களம் இறங்கும். அதேவேளையில், கடந்த ஆட்டத்தில் லக்னோவிடம் தோல்வி கண்ட குஜராத் வெற்றிப்பாதைக்கு திரும்ப கடுமையாக போராடும். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு ஜெய்ப்பூரில் நடைபெறும் 36வது லீக் ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸை எதிர்கொள்கிறது. லக்னோ அணி இதுவரை 7 லீக் ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 3 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.
அதேவேளையில், 7 ஆட்டங்களில் ஆடியுள்ள ராஜஸ்தான் 2 வெற்றி, 5 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. இரு அணிகளும் தோல்வியிலிருந்து வருவதால் வெற்றிப்பாதைக்கு திரும்ப கடுமையாக போராடும். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.