பியோங்யாங்,
கடந்த சில வாரங்களாக வடகொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழ்நிலை உருவாகி உள்ளது. அணு ஆயுத மூலப்பொருளான யுரேனியம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வடகொரியா ஏவுகணைகள் சோதனையிலும் ஈடுபட்டு வருகிறது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்த தென் கொரிய அதிபர் அமெரிக்காவில் நடக்க உள்ள தேர்தல் காரணமாக இவ்வாறான பதற்றமூட்டும் செயல்களை கவன ஈர்ப்புக்காக வடகொரியா செய்து வருவதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தென் கொரியாவுடனான எல்லைப் பகுதிகளை நிரந்தரமாக துண்டிக்க உள்ளதாக வட கொரிய அரசு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி வட கொரியாவில் இருந்து தென் கொரியா செல்லும் சாலை, ரெயில்வே வழித்தடங்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் எல்லைப்பகுதிகளில் கண்ணிவெடிகளைப் புதைத்து, தடுப்புகள் ஏற்படுத்தி, கூடுதல் ராணுவ வீரர்களை நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்பனவே இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை தாண்டிய பயணம் பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக வட கொரிய தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் உறையாற்றிய கிம் ஜான் உங், "எதிரிகள் ஆயுதங்கள் தாங்கிய படைகளைப் பயன்படுத்த முற்பட்டால் தயக்கமின்றி அவர்களுக்கு எதிராக அனைத்து தாக்குதல் திறன்களையும் பயன்படுத்துவோம். அதில், அணு ஆயுதங்கள் பயன்பாட்டையும் தவிர்க்க முடியாது. தென் கொரியாவும் அமெரிக்காவும் கூட்டு ராணுவப் பயிற்சி மூலம் அணு ஆயுதம் மற்றும் ராணுவத் திட்டமிடல்களை வலுப்படுத்த முயற்சிக்கின்றனர். இதனால், கொரிய தீபகற்பத்தில் சமநிலை பாதிக்கும் அபாயம் உண்டாவதால் வடகொரியாவின் அணு ஆயுதப் பயன்பாடு அதற்கான பதிலாக இருக்கும்" என்று அவர் கூறியிருந்தார்.