சென்னை, சிதம்பரத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் - விண்ணப்பங்கள் வழங்கும் பணி நாளை தொடக்கம்

6 hours ago 4

சென்னை,

கடலூர் மாவட்டம் சிதம்பரம் மற்றும் சென்னை மாநகராட்சியின் 6 வார்டுகளில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் வரும் 15-ந்தேதி தொடங்க உள்ளது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

"தமிழ்நாடு முதல்-அமைச்சர் 15.07.2025 அன்று "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக நடத்தப்படும் முகாமினை, கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் தொடங்கி வைக்க உள்ளார். இந்தத் திட்டம் ஜூலை 15 முதல் நவம்பர் மாதம் வரை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற உள்ளது.

இதனைத் தொடர்ந்து பெருநகர சென்னை மாநகராட்சியில் 15.7.2025 அன்று மாதவரம் மண்டலத்தில் வார்டு - 25, தண்டையார்பேட்டை மண்டலத்தில் வார்டு - 38, திரு.வி.க நகர் மண்டலத்தில் வார்டு - 76, தேனாம்பேட்டை மண்டலத்தில் வார்டு - 109, வளசரவாக்கம் மண்டலத்தில் வார்டு - 143 அடையாறு மண்டலத்தில் வார்டு - 168 ஆகிய 6 வார்டுகளில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம் தொடங்கி நடைபெற உள்ளது. இதனையொட்டி நாளை (07.07.2025) 6 வார்டுகளிலும் தன்னார்வலர்கள் வாயிலாக வீடு வீடாகச் சென்று விண்ணப்பங்கள் வழங்கும் பணி தொடங்குகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சியில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம் மண்டலம் 1 முதல் 15 வரை உள்ள 200 வார்டுகளில் நாள்தோறும் சராசரியாக 6 வார்டுகளில் முகாம்கள் நடைபெற உள்ளது. மண்டலம் 1 முதல் 15 வரை 200 வார்டுகள் உள்ளன. இதில் ஒவ்வொரு வார்டிலும் தலா இரண்டு முறை முகாம்கள் என 400 முகாம்கள் 15.07.2025 அன்று முதல் 31.10.2025 வரை நடைபெறவுள்ளது. முகாம்கள் குறித்த விவரங்களையும், விண்ணப்பப்படிவம் மற்றும் தகவல்களையும் சுமார் 2000 தன்னார்வலர்கள் மக்களிடம் தெரிவித்து வழங்கும் பணியினை மேற்கொள்வார்கள்.

முதற்கட்டமாக 15.07.2025 முதல் 14.08.2025 வரை காலை 09.00 முதல் மாலை 03.00 மணி வரை பெருநகர சென்னை மாநகராட்சியில் மண்டலம் 1 முதல் 15 வரைலுள்ள 200 வார்டுகளில் திட்டமிடப்பட்ட 109 வார்டுகளில் "உங்களுடன் ஸ்டாலின்" முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 109 வார்டுகளில் நடைபெறவுள்ள "உங்களுடன் ஸ்டாலின்" முகாம்கள் குறித்த விவரங்களை ஒவ்வொரு முகாமும் திட்டமிட்டபடி நடைபெற உள்ள 7 தினங்களுக்கு முன்பாக தன்னார்வலர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று மக்களிடம் தகவல் தெரிவித்து விண்ணப்பப் படிவங்கள் வழங்கும் பணி நாளை (07.07.2025) முதல் தொடங்கி நடைபெறும்.

இதில் "உங்களுடன் ஸ்டாலின்" முகாம் நடைபெறும் நாள், இடம் குறித்த விவரங்கள் மற்றும் 13 அரசுத்துறைகள் மூலம் வழங்கப்படவுள்ள 43 சேவைகள் குறித்த முழு விவரங்கள் ஆகியவற்றை பொதுமக்களுக்கு விவரித்து பயன்களுக்கான தகுதிகள், தேவைப்படும் ஆவணங்கள் குறித்து பொதுமக்கள் பயன் பெறும் அனைத்து விவரங்களும் தெரிவிக்கப்படும்.

இந்த முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறத் தகுதியுள்ள விடுபட்ட மகளிர் எவரேனும் இருப்பின் முகாம் நடைபெறும் நாளன்று நேரடியாகச் சென்று தங்கள் விண்ணப்பத்தினை அளிக்கலாம். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் "உங்களுடன் ஸ்டாலின்" முகாம்களில் மட்டுமே வழங்கப்படும்.

இம்முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அத்துடன் முகாம்களுக்கு வருகை தரும் பொதுமக்களின் உடல் நலனைப் பேணும் வகையில், மருத்துவ சேவைகளை வழங்க, மருத்துவ முகாம்களும் நடத்தப்படும்.

இந்தப் பணி மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக நடைபெறும். "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் முகாம்களில் முகாம் நடைபெறும் வார்டில் உள்ள பொது மக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Read Entire Article