கேப்டவுன்,
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள்: கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கேப்டவுனில் நேற்று தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதல் இன்னிங்சை தொப்டங்கிய தென் ஆப்பிரிக்க அணி 72 ரன்களுக்குள் 3 முன்னணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த நெருக்கடிக்கு மத்தியில் ஜோடி சேர்ந்த பவுமா - ரையான் ரிக்கெல்டன் இணை அணியை சரிவிலிருந்து மீட்டதுடன் வலுவான நிலைக்கு கொண்டு சென்றனர்.
அபாரமாக விளையாடிய இருவரும் சதமடித்து அசத்தினர். அபாரமாக ஆடிய ரிக்கெல்டன் 2-வது சதத்தையும், பவுமா 4-வது சதத்தையும் நிறைவு செய்தனர். அணியின் ஸ்கோர் 307-ஆக உயர்ந்தபோது, பவுமா 106 ரன்களில் கேட்ச் ஆனார். இவர்கள் இருவரும் இணைந்து 235 ரன்கள் பார்ட்னர்ஷிப் குவித்து அசத்தினர்.
முதல் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 80 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 316 ரன்கள் குவித்துள்ளது. ரிக்கெல்டன் 176 ரன்களுடனும் , டேவிட் பெடிங்ஹாம் 4 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். பாகிஸ்தான் தரப்பில் சல்மான் ஆகா 2 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.
முன்னதாக இந்த ஆட்டத்தின்போது பீல்டிங் செய்கையில் பாகிஸ்தான் வீரர் சைம் அயூபூக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது. பந்தை பிடிக்க சறுக்கியதில் காயம் ஏற்பட்டது. வலியால் துடித்த அவர் களத்தில் இருந்து வெளியேறினார். ஆஸ்பத்திரியில் ஸ்கேன் பரிசோதனை எடுத்து பார்க்கப் பட்டது. இதில் காயம் மோசமாக இருப்பது தெரியவந்தது. மேற்கொண்டு ஆட முடியாததால் இந்த போட்டியிலிருந்து விலகியுள்ளார் என அறிவிக்கப்பட்டது.