சென்னை,
அ.தி.மு.க. ஆட்சியில் இந்தியாவில் தூய்மை நகரங்களின் பட்டியலில் முறையே 45 மற்றும் 43-ஆவது இடத்தில் இருந்த சென்னை மாநகராட்சியை இன்று 199-வது இடத்திற்கு பின்னுக்குத் தள்ளிய ஸ்டாலினின் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவிப்பதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஸ்டாலினின் 41 மாத கால தி.மு.க. ஆட்சியில், தமிழகம் அனைத்துத் துறைகளிலும் சீரழிந்துவிட்டதை பலமுறை ஆதாரங்களுடன் பொறுப்புள்ள எதிர்க்கட்சியான அ.தி.மு.க. சார்பில் அறிக்கைகள் வாயிலாகவும், தமிழ் நாடு சட்டமன்றப் பேரவையிலும் எடுத்து வைத்தேன்.
கட்டிக்காட்டும் குறைகளை ஏற்றுக்கொண்டு அதை சரிசெய்ய மனமில்லாத முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், தனது அமைச்சர்கள் மூலம் பூசி மொழுகும் சால்ஜாப்பு அறிக்கைகளை விட்டு, புண்ணுக்கு -புனுகு தடவும் வேலையில் மட்டுமே ஈடுபட்டு வருகிறார்.
பத்து ஆண்டுகால அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை, மருத்துவத் துறை, வேளாண் துறை உட்பட பல துறைகளில் மத்திய அரசிடமிருந்து நூற்றுக்கணக்கான விருதுகளைப் பெற்று தமிழகத்தை தலைநிமிரச் செய்தோம். குறிப்பாக, சென்னை மாநகராட்சி சாலை பராமரிப்பு, தெரு விளக்கு பராமரிப்பு, மழைநீர் சேகரிப்பு மற்றும் மழை நீர் வடிகால் வசதி, குப்பைகள் அகற்றுதல் போன்றவற்றில் சிறந்து விளங்கியதையும், நூற்றுக்கும் மேற்பட்ட மத்திய அரசின் பரிசுகளைப் பெற்றதையும், யாரும் மறுக்கவும், மறைக்கவும் முடியாது.
இந்தியாவில் உள்ள நகரங்களின் தூய்மைப் பட்டியலில், எங்கள் ஆட்சியில் 2020-ல் 45-ஆவது இடத்திலும்; 2021-ல் 43-ஆவது இடத்திலும் சென்னை மாநகராட்சி இருந்தது. ஆட்சிக்கு வரும்போதெல்லாம் சென்னையை சிங்காரச் சென்னையாக மாற்றுவோம் என்று தம்பட்டம் அடிக்கும் ஸ்டாலின், ஆட்சிக்கு வந்த உடன், இரண்டு முறை சொத்துவரி உயர்வு, குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றல் கட்டண உயர்வு, குப்பை வரி உயர்வு என்று பல்வேறு சுமைகளை மக்கள் தலையில் சுமத்திவிட்டு, மக்களிடம் வசூலிக்கும் கட்டணங்களுக்கு ஏற்ப தூய்மைப் பணிகளை மேற்கொள்ளாததன் காரணமாக இன்று சென்னை மாநகராட்சி அகில இந்திய அளவில் எடுக்கப்பட்ட சர்வேயின்படி, இந்த ஆண்டு 199-வது இடத்தைப் பிடித்துள்ளதாக நாளிதழ்களிலும், ஊடகங்களிலும் செய்திகள் வந்துள்ளன.
ஏற்கெனவே மேயராக இருந்த ஸ்டாலின், மா. சுப்பிரமணியன் மற்றும் மாவட்ட அமைச்சர்கள், மாநகராட்சி மேயர், தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் என்று அனைவரும் இருக்கும் நிலையில், தொடர்ந்து சென்னை மாநகராட்சி அவல நிலையில் உள்ளதைக் கண்டு, மாநகராட்சி தேர்தலில் திமுக-விற்கு ஓட்டு போட்டது குற்றமா என்று மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். ஸ்டாலினின் திமுக அரசு வாயளவில் வடை சுடும் வேலையை மட்டும் செய்கிறதோ என்ற சந்தேகம் மக்களிடையே எழுந்துள்ளது.
இதன்மூலம் திமுக அரசும், துறை அமைச்சர்களும், மாநகராட்சி மேயரும் வாய்ச் சொல் வீரர்களாகத்தான் இருக்கிறார்களே தவிர, எந்த நலத் திட்டங்களையும் நிறைவேற்றாதது அம்பலமாகியுள்ளது. பருவ மழைக் காலங்களில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிக அளவில் வெள்ள நீர் தேங்கியிருந்த நிலையில், 2020-ஆம் ஆண்டில் அந்த இடங்கள் பெருமளவு குறைக்கப்பட்டது. அப்போது, சென்னையில் 210 நீர்நிலைகளில், 140 நீர்நிலைகள் தூர்வாருதல் மற்றும் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 48 கி.மீ. நீளமுள்ள 30 நீர்வரத்துக் கால்வாய்கள் தூய்மைப்படுத்தப்பட்டன.
ரொபோடிக் எக்சவேட்டர், மினி ஆம்பிபியன் வாகனங்கள் புதிதாக வாங்கப்பட்டு சென்னை மாநகராட்சி முழுவதும் தூர்வாரும் பணிகள், தூய்மைப் பணிகள் நடைபெற்றன. எங்களது ஆட்சியில் இப்பணிகள் முழுமையாக நடைபெற்றதுபோல், ஸ்டாலினின் திமுக ஆட்சியில் இப்பணிகள் முழுமையாக நடைபெறாத காரணத்தால், தூய்மை நகரமாக 43-ஆவது இடத்தில் இருந்த சென்னை மாநகராட்சி, தற்போது 199-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
இனியாவது, அம்மா ஆட்சியில் நடைபெற்றதுபோல், சென்னை மாநகரில் தூய்மைப் பணிகள், சாலை பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவும், தினசரி குடிநீர் வழங்கவும், கழிவு நீர் அகற்றல் போன்ற அடிப்படை வசதிகளையும் ஸ்டாலினின் அரசு மேற்கொண்டு, மீண்டும் தூய்மை நகரங்கள் பட்டியலில் சென்னை மாநகராட்சியை முன்னிலைக்குக் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.