தூத்துக்குடியில் நில உரிமையாளரிடம் ரூ.11.15 லட்சம் மோசடி: டெல்லியில் 2 பேர் கைது

1 week ago 3

தூத்துக்குடியை சேர்ந்த முதியவரும், நில உரிமையாளருமான ஒருவருக்கு அவரது செல்போனில், தங்களது நிலம் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் அதில் செல்போன் டவர் அமைத்தால் வருமானம் பெறலாம் என்றும் குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனையடுத்து மேற்சொன்ன முதியவர் அந்த நபரை தொடர்பு கொண்டு பேசியபோது, அவர் தான் ஒரு தள பொறியாளர் என்றும் உங்களது நிலத்தில் செல்போன் டவர் அமைத்து வருமானம் பெற்றுத் தருவதாக கூறியதோடு, மேலும் சில நபர்களை அந்த முதியவருக்கு அறிமுகப்படுத்தி செல்போன் டவர் அமைப்பதற்கு ஆவண கட்டணம், பொருட்கள் செலவு, போக்குவரத்து கட்டணம், நியமன கட்டணம் போன்ற பல்வேறு காரணங்களை கூறியுள்ளனர். இதனையடுத்து மேற்சொன்ன முதியவர் அந்த மர்ம நபர்களின் ஆசை வார்த்தையை நம்பி ரூ.11 லட்சத்து 15 ஆயிரத்து 720 பணத்தை செல்போன் டவர் அமைப்பதற்காக கொடுத்துள்ளார்.

பின்னர் தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த முதியவர் இதுகுறித்து NCRP-ல் (National Cyber crime Reporting Portal) புகார் பதிவு செய்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி, தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு ஏ.டி.எஸ்.பி. சகாய ஜோஸ் மேற்பார்வையில், சைபர் குற்றப் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் மேற்கு டெல்லி, திலக் நகர், சான்ட் ஹார்க் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார்ஷா மகன் நாராயன் குமார்ஷா (வயது 20), மேற்கு டெல்லி, கயாலா பகுதியைச் சேர்ந்த ஓம்பிரகாஷ் குப்தா மகன் தீபக்(20) மற்றும் சிலர் சேர்ந்து மேற்படி முதியவரை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து தூத்துக்குடி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு போலீசார் நாராயன் குமார்ஷா மற்றும் தீபக் ஆகிய 2 பேரையும் 2.5.2025 அன்று டெல்லியில் வைத்து கைது செய்து, அவர்கள் தூத்துக்குடி அழைத்து வரப்பட்டு நேற்று (5.5.2025) தூத்துக்குடி நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இதுகுறித்து சைபர் குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Read Entire Article