தூத்துக்குடியில் கர்ப்பிணி பெண் உயிரிழந்த விவகாரம்: மாவட்ட சுகாதார அலுவலர் விளக்கம்

7 hours ago 1

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு இருந்த ஜாஹிரா என்ற நிறை மாத கர்ப்பிணி, திடீரென உயிரிழந்தார். அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் உயிரிழந்தது. அங்கு பிரசவம் பார்க்க டாக்டர்கள் இல்லாத நிலையில் 2 செவிலியர்கள் மட்டுமே சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள், உயிரிழந்த பெண்ணின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், மருத்துவர் இல்லாத காரணத்தால் கர்ப்பிணி பெண் உயிரிழந்ததாக கூறுவது உண்மைக்கு புறம்பான செய்தி என தூத்துக்குடி மாவட்ட சுகாதார அலுவலர் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்து இருப்பதாவது;

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஜாஹீரா(30) பிரசவ வலி காரணமாக அனுமதிக்கப்பட்டார். அங்குள்ள மருத்துவரால் ஜாஹீராவிற்கு பிரசவத்திற்கான உடனடி சிகிச்சை தொடங்கப்பட்ட நிலையில், அவருக்கு கர்ப்பவாய் விரிவடைதலில் தொய்வு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. இதனால் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவப் பரிசோதனைகள் நடைபெற்றது. அங்கு ஜாஹீராவை பரிசோதித்தபோது மருத்துவர்கள், அவருக்கும் குழந்தைக்கும் நாடித்துடிப்பு இல்லை என கண்டறிந்தனர். தாய் மற்றும் சேயின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 5 மருத்துவர் பணியிடங்கள் நிரப்பபட்டுள்ளன. 08.03.2025 தேதியில் எந்த மருத்துவர் பணியிடமும் காலியாக இல்லை. எனவே புதுக்கோட்டை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் பணியிடம் காலியாக உள்ளது என்பதும், மருத்துவர் இல்லாத காரணத்தினால் தாயும் சேயும் இறந்துள்ளனர் என்பதும் உண்மைக்கு புறம்பான செய்தியாகும்."

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Read Entire Article