
மாஸ்கோ,
ரஷிய அதிபர் புதின் மற்றும் ஈரான் அதிபர் மசூத் பிஜஷ்கியான் இடையே கடந்த ஜனவரியில், வர்த்தகம் மற்றும் ராணுவம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில், ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டது. இந்த சூழலில், ஈரான், சீனாவுடனான கூட்டு கடற்பயிற்சியில் ரஷியா ஈடுபட உள்ளது.
இதுபற்றி சீன பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், பாதுகாப்பு வளையம்-2025 என்ற பெயரில் மார்ச் மாத இறுதியில், இந்திய பெருங்கடலில் ஈரான் நாட்டுக்கு பக்கத்தில் சீனா மற்றும் ஈரானுடன் சேர்ந்து ரஷியா கூட்டு கடற்பயிற்சியில் ஈடுபட உள்ளது என தெரிவித்து உள்ளது.
ஈரானில் உள்ள சபஹர் துறைமுகத்தில் இருந்து சற்று தொலைவில் திங்கட்கிழமையன்று இந்த பயிற்சி நடைபெறும் என ஈரானில் இருந்து வெளிவரும் அரசு ஊடக செய்தி தெரிவிக்கின்றது. சீன அரசு ஊடகம் வெளியிட்ட செய்தியில், சீனாவின் கடற்படையை சேர்ந்த போர் கப்பல் ஒன்றும் மற்றும் சரக்கு விநியோக கப்பல் ஒன்றும் இதில் ஈடுபடும்.
இதில், கடல் சார்ந்த இலக்குகளை தாக்கும் வகையில், சேதங்களை கட்டுப்படுத்துதல், கூட்டாக இணைந்து தேடுதல் மற்றும் மீட்பு பணியில் ஈடுபடுவது உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்த பயிற்சியில் பங்கு பெறும் நாடுகளின் கடற்படையினர், ஒத்துழைபபை வளர்த்தெடுக்கும் வகையில் மற்றும் பரஸ்பரம் ராணுவ நம்பிக்கையை வலுப்படுத்துவதற்கான நோக்கம் கொண்டது.
இந்த பயிற்சிகளை அஜர்பைஜான் குடியரசு, தென்ஆப்பிரிக்கா, ஓமன், கஜகஸ்தான், பாகிஸ்தான், கத்தார், ஈராக், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளை சேர்ந்த கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையிடும் பணிகளை செய்வார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஈரான் கப்பல்கள் மற்றும் இஸ்லாமிய புரட்சி பாதுகாவல் படையின் கடற்படை கப்பல்கள் இந்த பயிற்சியில் ஈடுபடும் என ஈரான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.