தூத்துக்குடி விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு: அதிகாரிகளுடன் எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் ஆலோசனை

2 hours ago 1

காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம்தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தியது. இதையடுத்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி, இந்திய குடியிருப்பு பகுதிகளில் தாக்குதலை நடத்தியது. இந்தியாவின் 15 நகரங்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் காஷ்மீரில் பொதுமக்கள் 16 பேர் பலியானார்கள். பாகிஸ்தானின் இந்த அத்துமீறலுக்கு இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது.

இதனால் தற்போது இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்திய வான்மண்டலங்களில் கட்டுப்பாடுகளை விதித்து விமான சேவைகளை ஒழுங்குப்படுத்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்திய அரசிடம் இருந்து மறுஉத்தரவு வரும் வரையில் பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி, இந்த நிலை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே போர் பதற்றம் காரணமாக வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவில் உள்ள 32 விமான நிலையங்கள் வருகிற 15-ம் தேதி காலை 5.29 மணி வரை மூடப்படும் என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்ந நிலையில் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் நேற்று தூத்துக்குடி விமான நிலையத்தின் பாதுகாப்பு நெறிமுறைகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். நாட்டில் தற்போது நிலவும் பாதுகாப்பு சூழ்நிலை மற்றும் அதிகரித்த எச்சரிக்கை நிலையை கருத்தில் கொண்டு, பல பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தூத்துக்குடி விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டது. அதில் பல அடுக்கு பயணிகள் மற்றும் ஊழியர்களிடம் சோதனை, உடமைகள் சோதனை, வாகன சோதனை மற்றும் பிற நாசவேலை தடுப்பு ஒத்திகைகளின் செயல்பாட்டை மாவட்ட எஸ்.பி. தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்தார்.

மேலும் தூத்துக்குடி விமான நிலையத்தில் மாவட்ட எஸ்.பி. தலைமையில் அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் அனைத்து பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது. அதில் கூடுதல் ஆயுதமேந்திய விரைவு அதிரடி படைகள் மற்றும் அதிகப்படுத்தப்பட்ட பணியாளர்களின் செயல்பாடு குறித்து விரிவாக ஆராயப்பட்டது. விமான நிலைய எல்லைகள் மற்றும் வெளிப்புற பகுதிகளில் கூடுதல் ஆயுதமேந்திய ரோந்து காவலர்கள் நியமிக்கப்பட்டனர். அண்மையில் நடத்தப்பட்ட விமானக் கடத்தல் தடுப்பு ஒத்திகையின் கூறுகள் புதுப்பிக்கப்பட்டன. மேலும் தூத்துக்குடி விமான நிலையத்தின் பாதுகாப்பில் தீவிர கண்காணிப்பை தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளை எஸ்.பி. அறிவுறுத்தினார்.

Read Entire Article