தூத்துக்குடி: படிப்பக வளாகத்தை பார்வையிட்டு, மாணவர்களுடன் கலந்துரையாடிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

3 weeks ago 5

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் பாளை ரோடு தமிழ்ச்சாலை பகுதியிலுள்ள பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள படிப்பக வளாகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு, அங்கு படிக்கும் மாணவ, மாணவியர்களிடம் கலந்துரையாடினார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பாளை ரோடு தமிழ்ச்சாலை பகுதியில் அமைந்துள்ள பூங்காவில், டி.என்.பி.எஸ்.சி. வங்கி, ரெயில்வே போன்ற பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாகவும், இயற்கை சூழலில் அமர்ந்து படிக்கும் வகையிலும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள், நாளிதழ்கள், இருக்கை வசதி, மின் வசதி, Wi-Fi, குடிநீர் வசதி மற்றும் கழிவறை போன்ற அனைத்து கட்டமைப்பு வசதிகளுடன் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் படிப்பக வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், தூத்துக்குடி மாநகர பகுதியைச் சார்ந்த இளைஞர்கள் பல்வேறு வகையான போட்டித் தேர்வுகளில் பங்கு பெற்று வெற்றி பெறுவதற்கு உந்து சக்தியாக இப்படிப்பகம் விளங்கி வருகிறது. இப்படிப்பகத்தில் தினமும் சுமார் 300 மாணவ, மாணவியர்கள் படித்து வருகின்றனர்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தூத்துக்குடி, பாளை ரோடு தமிழ்ச்சாலை பகுதியிலுள்ள பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள இப்படிப்பக வளாகத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு, படிப்பகத்தில் படித்து வரும் மாணவ, மாணவியர்களிடம் அங்குள்ள வசதிகள் குறித்தும், அவர்களது தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும், அம்மாணவ, மாணவியர்களிடம் நன்றாக படித்து போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று வாழ்வில் முன்னேற வேண்டும் என்று வாழ்த்தினார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article