
நெல்லை,
நெல்லை மாவட்டம் வள்ளியூர் மின்வாரிய குடியிருப்பு காலனி பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜூனன் (வயது 78). இவர் மின்வாரியத்தில் என்ஜினீயராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ருக்மணி (71). இவர்களுக்கு பாலசுந்தர், செந்தில் முருகன் ஆகிய 2 மகன்களும், சண்முகசுந்தரி என்ற மகளும் உள்ளனர். பாலசுந்தர் காவல்கிணறு மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் பணியாற்றி வருகிறார். தனது ெபற்றோர் வீட்டின் அருகில் உள்ள மற்றொரு வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். செந்தில்முருகன், சண்முகசுந்தரி ஆகியோர் வெளியூர்களில் வசித்து வருகிறார்கள்.
கடந்த சில மாதங்களுக்கு முன் அர்ஜூனன் இறந்துவிட்டதால் ருக்மணி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். அவருக்கு நேற்று காலையில் சாப்பாடு கொடுப்பதற்காக பாலசுந்தர் சென்றார். ஆனால், முன்பக்க கதவு பூட்டப்பட்டு இருந்தது. தனது தாயார் பெயரை கூறி அழைத்தும் அவர் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பாலசுந்தர் வீட்டின் பின்புறம் சென்றார். அங்கு பின்கதவு திறந்து கிடந்தது.
உள்ளே சென்றபோது அங்கு ருக்மணி தலையில் ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவரது கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க சங்கிலி மற்றும் கையில் அணிந்திருந்த 7 பவுன் வளையல் என 14 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் பீரோ லாக்கரில் இருந்த நகைகள் தப்பின. இதுகுறித்து வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.