*65 வாகனங்களை மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்த உத்தரவு
*5 வாகனங்களின் தகுதிச்சான்று ரத்து
தூத்துக்குடி : தூத்துக்குடி வட்டார போக்குவரத்து எல்லைக்குட்பட்ட பள்ளி வாகனங்களின் தரம் குறித்து மாவட்ட கலெக்டர் இளம்பகவத் ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்புக் கருதி தமிழ்நாடு மோட்டார் வாகனங்கள் சிறப்பு விதிகளின்படி மாவட்ட நிர்வாகம், காவல்துறை, போக்குவரத்து துறை, பள்ளி கல்வித்துறை ஆகிய துறைகள் இணைந்து தூத்துக்குடி, திருச்செந்தூர், கோவில்பட்டி ஆகிய வட்டார போக்குவரத்து அலுவலகங்களைச் சேர்ந்த அனைத்து பள்ளி வாகனங்களும் ஆண்டுதோறும் கூட்டாய்வு செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி முதற்கட்டமாக தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் நிகழ்ச்சி, தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலக மைதானத்தில் மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் முன்னிலை வகித்தார்.
ஆய்வுக்கு பிறகு மாவட்ட கலெக்டர் இளம்பகவத் நிருபர்களிடம் கூறுகையில், தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட 67 பள்ளிகளை சேர்ந்த 213 வாகனங்களில் 141 வாகனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் 71 வாகனங்கள் முழு தகுதியுடையதாக இருந்தது. 65 வாகனங்கள் சிறு,சிறு குறைகள் உள்ள காரணத்தால் நிராகரிக்கப்பட்டு குறைகள் நிவர்த்தி செய்து மீண்டும் ஆய்வுக்குட்படுத்த அறிவுறுத்தப்பட்டது. 5 வாகனங்களின் தகுதிச்சான்று ரத்து செய்யப்பட்டு, பழுதுகளை சரி செய்து மீண்டும் ஆய்வுக்குட்படுத்தி, தகுதிச்சான்றுகளை புதுப்பித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
பாதுகாப்பு நலன் கருதி இந்த ஆய்வில் 16 விதமான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக வாகனங்களின் தற்போதைய நிலை, தரம், குழந்தைகளின் பாதுகாப்பு, அரசு விதிமுறைகளின்படி வாகனங்கள் இயங்கப்படுவது, முதலுதவி பெட்டி மற்றும் தீயணைப்பு கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளது குறித்தும், அவசரகால வழிகள், இருக்கைகள், வாகனங்களின் தரைத்தளம், ஓட்டுநர்களின் உரிமம், வேகக்கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளனவா, வாகனத்தின் உள்புறம், முன்புறம் மற்றும் பின்புறத்தில் அமைக்கப்பட்டுள்ள கேமராக்கள் மற்றும் வாகனத்தின் பின்புறம் அமைக்கப்பட்டுள்ள சென்சார் கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளனவா என்பது குறித்தும், போதிய பராமரிப்பு உள்ளதா போன்றவை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது, என்றார்.
தொடர்ந்து தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை மூலமாக வாகனத்தில் தீ விபத்து ஏற்படும்போது செய்ய வேண்டிய மீட்பு மற்றும் சீரமைப்பு நடவடிக்கைகள் குறித்த செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
பள்ளிகளில் பயணம் செய்யும் குழந்தைகளுக்கு ஆபத்து காலங்களில் செய்யப்படும் முதல் உதவிப் பயிற்சி, தூத்துக்குடி மாவட்ட 108 அவசர ஊர்தி அலுவலர்களால் செயல்முறை விளக்கம் நடத்தி காண்பிக்கப்பட்டது.
இந்த ஆய்வின் போது தூத்துக்குடி கோட்டாட்சியர் பிரபு, வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன், மோட்டார் வாகன ஆய்வாளர் பெலிக்ஸ் மாசிலாமணி, தீயணைப்பு துறை அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post தூத்துக்குடி ஆர்டிஓ எல்லைக்குட்பட்ட 141 பள்ளி வாகனங்களில் கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.