ஒன்றியத்தில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜ ஆட்சி அமைந்த கடந்த 10 ஆண்டுகளில் சுதந்திரமாக செயல்படக்கூடிய அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சிபிஐ ஆகியவற்றை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வீடுகளில் ரெய்டு நடத்துவது, சட்டவிரோத பண முறைகேடு, பரிமாற்றம் என்று குற்றம்சாட்டி அமலாக்கத்துறை மூலம் விசாரணை என்ற பெயரில் டார்ச்சர் செய்வது, கைது செய்வது, சிறையில் அடைப்பது என்ற அவலங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. பாஜ அல்லாத பிற கட்சிகள் ஆட்சியில் உள்ள மாநிலங்களில் முதல்வரை கூட இவர்கள் விட்டு வைப்பதில்லை.
அப்படி சமீபத்தில் பலிகடா ஆக்கப்பட்டவர் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். தற்போது இவர்களது அடுத்த குறியாக இருப்பது கர்நாடக முதல்வர் சித்தராமையா. இவர் மீது மூடா மாற்று நில மோசடியில் வழக்கு பதிவு செய்து அமலாக்கத்துறை மற்றும் லோக்ஆயுக்தா விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்குக்கு முன்பு வால்மீகி பழங்குடியினர் வளர்ச்சி கழக நிதி ரூ.187 கோடி முறைகேடு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அத்துறை அமைச்சராக இருந்த நாகேந்திரா தனது பதவியை ராஜினாமா செய்தார்.
விசாரணையில் இறங்கிய அமலாக்கத்துறை காங்கிரஸ் எம்எல்ஏ நாகேந்திராவை கைது செய்தது. வால்மீகி வளர்ச்சி நிதி மோசடிக்கு இவர் தான் மூளையாக செயல்பட்டுள்ளார் என்று நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதுமட்டுமின்றி வால்மீகி வளர்ச்சி நிதியை அபகரித்து 24 பேரின் உதவியுடன் மக்களவை தேர்தலின் போது பல்லாரி தொகுதியில் உள்ள 7.41 லட்சம் வாக்காளர்களுக்கு தலா ரூ.200 ஓட்டுக்கு பணம் வழங்கியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று சிறையில் இருந்து வெளியே வந்த எம்எல்ஏ நாகேந்திரா, ‘தனக்கும் வால்மீகி நிதி மோசடிக்கும் எந்த தொடர்பும் இல்லை. அமலாக்கத்துறை குற்றச்சாட்டில் உண்மையில்லை. வால்மீகி நிதி மோசடியில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமாருக்கு தொடர்பு இருப்பதாக வாக்குமூலம் அளிக்குமாறு மூன்று மாதமாக கொடுமைபடுத்தினர். பாஜ மேலிட தலைவர்களின் ஆலோசனையின் படி தான் இவ்வாறு நடக்கிறது.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பாஜ சதி செய்கிறது. சித்தராமையா நிதித்துறையை நிர்வகிப்பதால் அவரை இந்த வழக்கில் தொடர்பு படுத்த அமலாக்கத்துறை முயற்சி செய்கிறது. வங்கி முறைகேட்டுக்கும் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. வங்கி அதிகாரிகள் கேஒய்சி விவரங்களை சோதிக்காமலேயே பணத்தை பரிமாற்றம் செய்துள்ளனர். எனவே, வங்கி தரப்பில் நடந்துள்ள ஊழலே தவிர, எனக்கோ, அரசுக்கோ தொடர்பில்லை’ என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இப்படி பாஜ தலைவர்களின் கைப்பாவையாக அமலாக்கத்துறை அதிகாரிகள் இருந்து கொண்டு காங்கிரஸ் ஆட்சிக்கு எப்படியாவது அவதூறு ஏற்படுத்தி ஆட்சியை கவிழ்க்க காய் நகர்த்தி வருகின்றனர். அதே சமயம், பாஜ முன்னாள் அமைச்சர்களும், தற்போது ஒன்றிய அமைச்சராக உள்ள குமாரசாமி மீதும் லோக்ஆயுக்தாவிலேயே வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.
ஆனால் அவர்கள் மீதான விசாரணைக்கு அனுமதி வழங்காமல் ஆளுநர் ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. இப்படி ஒன்றிய பாஜ அரசு அதிகார துஷ்பிரயோகம் செய்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கு தொடர்ந்து ெதால்லை கொடுத்து வருவது ஜனநாயகத்துக்கு விரோதமானது.
The post துஷ்பிரயோகம் appeared first on Dinakaran.