துவரம் பருப்பு விநியோகத்தில் தட்டுப்பாடு இல்லை எதிர்காலத்திலும் தட்டுப்பாடு வராது: அமைச்சர் சக்கரபாணி விளக்கம்

1 month ago 4

சென்னை: துவரம் பருப்பு விநியோகத்தில் எந்தவித தட்டுப்பாடும் இல்லை. எதிர்காலத்திலும் தட்டுப்பாடுகள் ஏற்படாத வண்ணம் சீரிய முறையில் தொடர்ந்து அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று உணவு பாதுகாப்பு துறை அமைச்சர் சக்கரபாணி விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னை மாநகரில் உள்ள பெரும்பான்மையான நியாய விலைக் கடைகளில் நவம்பர் மாதத்திற்கான துவரம் பருப்பு இதுவரை வழங்கப்படவில்லை. சென்னையில் மட்டுமின்றி சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் நியாயவிலைக் கடைகளில் பருப்பு விநியோகிக்கப்படவில்லை என்றும் துவரம் பருப்பு விநியோகம் பற்றி முழுதும் அறியாமல் கூறியிருக்கிறார். நவம்பர் மாதத்தில் சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களுக்கும் 2,03,84,122 கிலோ துவரம் பருப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டு இதுவரை 1,62,83,486 கிலோ வழங்கப்பட்டு, நவம்பர் மாத ஆரம்ப இருப்பையும் (27,53,606 கிலோ) சேர்த்து 92% நியாய விலைக் கடைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் 68,44,719 கிலோ துவரம் பருப்பு இருப்பு உள்ளது. நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கிடங்குகளில் 66,91,000 கிலோ துவரம் பருப்பு கையிருப்பு உள்ளது. சென்னை மண்டலங்களை பொறுத்தமட்டில் மொத்தமுள்ள 1794 கடைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 20,55,811 கிலோ துவரம் பருப்பில் 14,75,019 கிலோ வழங்கப்பட்டு நவம்பர் மாத ஆரம்ப இருப்பையும் (2,68,122 கிலோ) சேர்த்து 87% துவரம் பருப்பு நியாய விலைக் கடைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அவற்றிற்கான ஒதுக்கீட்டில் முறையே 96%, 94% மற்றும் 97% துவரம் பருப்பு அனுப்பப்பட்டுள்ளது.

ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச்-2025 மாதம் வரை துவரம் பருப்பு மற்றும் பாமாயில் விநியோகம் சீராக நடைபெறுவதற்காக 6 கோடி கிலோ துவரம் பருப்பு மற்றும் 6 கோடி லிட்டர் பாமாயிலுக்கும் நேற்று ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. துவரம் பருப்பு விநியோகத்தில் எந்தவித தட்டுப்பாடும் இல்லை. எதிர்காலத்திலும் தட்டுப்பாடுகள் ஏற்படாத வகையில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இனிமேலாவது ராமதாஸ் சரியாக விவரங்களை தெரிந்து கொண்டு அறிக்கை வெளியிட்டால் நல்லது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post துவரம் பருப்பு விநியோகத்தில் தட்டுப்பாடு இல்லை எதிர்காலத்திலும் தட்டுப்பாடு வராது: அமைச்சர் சக்கரபாணி விளக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article