துவங்கியது.. வெயில்… பழநி வனத்தில் தீ தடுப்பு கோடு அமைக்கப்படுமா?

2 hours ago 2

பழநி, பிப். 6: திண்டுக்கல் மாவட்டத்திலேயே 18 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் பெரிய வனப்பரப்பை கொண்டது பழநி வனச்சரகம். இங்கு வரிப்புலி, சிறுத்தை, கரடி, மான், கேளையாடு, யானை, காட்டு மாடு, காட்டுப்பன்றி போன்ற விலங்கினங்கள் அதிகளவு உள்ளன. தவிர, சந்தனம், தேக்கு, ஈட்டி போன்ற விலை உயர்ந்த மரங்களும், அரிய வகை மூலிகைகளும் அதிகளவில் உள்ளன. இந்த வனப்பரப்பில் ஏராளமான சருகுகள் உதிர்ந்து கிடக்கின்றன. இந்நிலையில் பகல் நேரங்களில் தற்போது வெயில் கொளுத்த துவங்கி உள்ளது. வெயிலின் காரணமாக தற்போது இச்சருகுகளின் மூலம் வனப்பகுதிக்குள் தீ விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

காட்டு தீ ஏற்பட்டால் வனப்பகுதியில் உள்ள விலை உயர்ந்த மரங்கள், அரிய வகை மூலிகைகள் மற்றும் வனவிலங்குகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கோடை காலம் துவங்குவதற்கு முன்பே வனத்துறையினர் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது வழக்கம். கடந்த ஆண்டு சுமார் 22 கிலோ மீட்டர் தூரத்திற்கு தீ தடுப்பு கோடு அமைக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் தீ விபத்துகள் பெருமளவு கட்டுப்பாட்டிற்குள் வந்தது. எனவே, வனத்துறையினர் இந்த ஆண்டும் கோடை காலத்திற்கு முன் விரைந்து நடவடிக்கை எடுத்து தீ தடுப்பு கோடுகள் அமைக்க வேண்டுமென பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post துவங்கியது.. வெயில்… பழநி வனத்தில் தீ தடுப்பு கோடு அமைக்கப்படுமா? appeared first on Dinakaran.

Read Entire Article