
சென்னை,
தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான். இவர் மலையாள நடிகராக இருந்தாலும், இவரது திரைப்படங்களுக்கு தென்னிந்திய மொழிகளில் அதிக வரவேற்பு கிடைப்பது வழக்கமாகும். அவரது நடிப்பில் வௌியான 'சீதா ராமம்' திரைப்படம் ஏகபோக வரவேற்பை பெற்றது. இதையடுத்து அவர் நடித்த கிங் ஆப் கோதா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றி அடையவில்லை.
இதைத் தொடர்ந்து துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் தான் 'லக்கி பாஸ்கர்'. வெங்கி அட்லுரி இத்திரைப்படத்தை இயக்கி உள்ளார். இந்தப் படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் பார்ச்சூன் போர் சினிமாஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இதில் துல்கர் சல்மான் உடன் இணைந்து மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். ஜி.வி பிரகாஷ் இதற்கு இசை அமைக்கிறார்.
'லக்கி பாஸ்கர்' படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்றது. சமீபத்தில் 'கொல்லாதே' பாடல் வெளியாகி வைரலானது. மேலும், இப்படம் வரும் 31 -ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இது குறித்த பதிவை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.