நாளையுடன் நிறைவடையும் மகா கும்பமேளா... பிரயாக்ராஜில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்

3 hours ago 1

லக்னோ,

உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த மாதம் 13-ந்தேதி தொடங்கியது. 45 நாட்கள் மகா கும்பமேளா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உள்ளது. இதற்காக 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

1,800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள், 25 ஆயிரம் தொழிலாளர்கள், 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவற்றை அரசு அமைத்துள்ளது. இதுவரை 60 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் கும்பமேளாவிற்கு வருகை தந்து, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.

இந்நிலையில், ஒன்றரை மாதமாக விமரிசையாக நடந்து வரும் கும்பமேளா, மகா சிவராத்திரி தினமான நாளை (பிப்.26) நிறைவடைகிறது. நிறைவு நாளான நாளை, உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அயோத்தி தாம் ரெயில் நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ரெயிலில் வரும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன. 

இதுகுறித்து மகா கும்பமேளா சிறப்பு டிஐஜி வைபவ் கிருஷ்ணா கூறும்போது; "திரிவேணி சங்கமத்தில் 24-ம் தேதி (நேற்று) ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் புனித நீராடியுள்ளனர். நிறைவு நாளான 26-ம் தேதி (நாளை) கும்பமேளாவில் அதிக அளவிலான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால் அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது." என்றார்.

 

Read Entire Article