
புளோரிடா,
அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் உள்ள புளோரிடா ஸ்டேட் பல்கலைக்கழகத்தில், மாணவ மாணவிகள் வழக்கம்போல் காலையில் வகுப்பறையில் இருந்தனர். அப்போது, திடீரென நபர் ஒருவர் அதன் வளாகத்திற்குள் ஆயுதத்துடன் புகுந்து, மாணவ மாணவிகளை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.
துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதும் பக்கத்து வகுப்புகளில் இருந்தவர்கள் அலறியடித்து கொண்டு நாலாபுறமும் ஓட தொடங்கினர். இந்த நிலையில், சூயிங்கம் கொண்டு துப்பாக்கி சூட்டில் இருந்து உயிர் தப்பிய விவரங்களை ஜெப்ரி லாபிரே என்ற மாணவர் பகிர்ந்துள்ளார். அந்த தருணங்களை அவர் நினைவுகூர்ந்து கூறும்போது, வெளியே துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதும் நானும், மற்றவர்களும் வகுப்பிற்குள் பதுங்கி, பாதுகாப்பாக இருக்க முயன்றோம்.
அப்போது, எங்களுடைய ஆசிரியர், ஜன்னலை காகிதம் கொண்டு மூட விரும்பினார். அதனால், துப்பாக்கி சூடு நடத்தும் நபர் உள்ளே பார்க்க முடியாது. ஆனால், காகிதம் ஒட்ட பயன்படும் டேப் எங்களிடம் இல்லை. உடனே நாங்கள், எங்களிடம் இருந்த சூயிங்கமை எடுத்து மெல்ல தொடங்கினோம். சூயிங்கமை மென்று, அது பசை போன்று மாறியதும் ஜன்னலில் ஒட்ட பயன்படுத்தினோம் என்றார்.
இந்த துப்பாக்கி சூடு நடத்தியது உள்ளூரின் துணை ஷெரீப் பதவியை வகிக்கும் ஒருவரின் வளர்ப்பு மகன் என்பது விசாரணையில் தெரிய வந்தது. பீனிக்ஸ் இக்நர் (வயது 21) என்ற அந்த இளைஞர், அவருடைய வளர்ப்பு தாயின், பணிக்காக வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து தாக்குதலை நடத்தியுள்ளார்.
இதேபோன்று மேடிசன் அஸ்கின்ஸ் (வயது 23) என்ற மாணவியின் மீதும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில், தோழியுடன் கட்டிடத்தின் முன்பகுதி வழியே நடந்து சென்றபோது, மேடிசன், அமர கூடிய பின்பகுதியில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு உள்ளது.
பின்னால் இருந்து குண்டடி பட்டதும், தரையில் படுத்து, கண்களை நன்றாக மூடி கொண்டார். மரணம் அடைந்தவர் போன்று நடித்திருக்கிறார். பக்கத்தில், இக்நர் மறுபடியும் சுடுவதற்காக துப்பாக்கியை தயார்படுத்தி கொண்டிருந்தபோது, சக மாணவ மாணவிகள், தொடர்ந்து ஓடுங்கள் என கூறியபடி தப்பியோடினர்.
இந்த சத்தம் எல்லாம் கேட்டபடி மேடிசன் அசையாமல் தரையில் கிடந்துள்ளார். இதனால், உயிரிழந்து விட்டார் என அவரை விட்டு விடுவார் என்று மேடிசன் நினைத்திருக்கிறார். அதனை பயத்துடன் அவர் பின்னர் கூறினார்.
இந்த தாக்குதலில் 2 பேர் பலியானார்கள். 5 பேர் காயமடைந்தனர். இக்நரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு உயிருடன் பிடித்தனர். இக்நருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.