சண்டிகர்,
அரியானா மாநிலத்தை சேர்ந்த துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர், கடந்த ஆண்டு நடைபெற்ற பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் 2 பதக்கங்களை வென்றார். அவருக்கு நேற்று முன்தினம் இந்திய அரசு 'கேல் ரத்னா' விருது வழங்கி கவுரவித்தது.
இந்நிலையில், மனு பாக்கரின் மாமா யுத்வீர் சிங் மற்றும் அவரது பாட்டி சாவித்திரி தேவி ஆகியோர் அரியானாவின் சாக்ரி தாத்ரி பகுதி அருகே மகேந்திரநகர் நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது கடும் பனிப்பொழிவு நிலவியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவர்கள் சென்ற இருசக்கர வாகனம், ஒரு கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் கார் தலைக்குப்புற கவிழ்ந்த நிலையில், கார் ஓட்டுநர் தப்பியோடினார். இந்த விபத்தில் மனு பாக்கரின் மாமா மற்றும் பாட்டி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.