![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/05/37756100-nstpc.webp)
தன்டேவாடா,
சத்தீஷ்காரின் தன்டேவாடா மாவட்டத்தில் தெற்கு பஸ்தார் பகுதிக்கு உட்பட்ட மலங்கர் பகுதியை சேர்ந்த நக்சலைட்டுகள் 6 பேர் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு, மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்.) முன் இன்று சரணடைந்தனர்.
இதுபற்றி மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, 5 பெண்கள் உள்ளிட்ட 6 நக்சலைட்டுகள் போலீசில் சரண் அடைந்தனர். நக்சலைட்டுகள் முழு அடைப்புக்கு அழைப்பு விடும்போது, சாலைகளில் குழிகளை தோண்டி போடுதல், பாதைகளை மறைக்கும் வகையில் மரங்களை வெட்டி, குறுக்கே போடுதல் மற்றும் போஸ்டர்கள், பேனர்கள் போன்றவற்றை வைத்தல் உள்ளிட்ட பணிகள் இவர்களுக்கு தரப்பட்டு உள்ளது.
இவர்களுக்கு, அரசின் சரண் மற்றும் மறுவாழ்வு கொள்கையின்படி வசதிகள் செய்து கொடுக்கப்படும் என கூறியுள்ளார். இதனால், தலைக்கு பரிசு தொகை அறிவிக்கப்பட்ட 212 பேர் உள்பட 900 நக்சலைட்டுகள் அதில் இருந்து விலகி போலீசில் சரண் அடைந்து உள்ளனர்.