![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/05/37764753-state-01.webp)
சென்னை,
விருதுநகர் மாவட்டம் சின்னவாடி கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் இன்று மதியம் நிகழ்ந்த வெடிவிபத்தில் பெண் ஒருவர் பலியானார். பிற்பகலில் உணவு இடைவேளைக்குப் பிறகு, ஓர் அறை பலத்த சப்தத்துடன் வெடித்துச் சிதறியது. மேலும், அடுதடுத்து 7 அறைகள் வெடித்துச் சிதறின.
இந்த கோர விபத்தில் பட்டாசு ஆலையில் இருந்து துவார்பட்டியைச் சேர்ந்த ராமலட்சுமி (50) உடல் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில் அதிவீரன்பட்டியைச் சேர்ந்த வீரலட்சுமி (37), கஸ்தூரி (31), வைத்தீஸ்வரி (32), பொம்மையாபுரத்தைச் சேர்ந்த முருகேஸ்வரி (55), ஆவுடையாபுரத்தைச் சேர்ந்த மாணிக்கம் (54), மீனம்பட்டியைச் சேர்ந்த சைமன் டேனியல் (33) ஆகிய 6 பேர் பலத்த காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும், பலத்த காயமடைந்தோருக்கு ரூ. 2 லட்சமும், லேசான காயமடைந்தோருக்கு ரூ. 50,000 நிவாரணம் வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
வெடிவிபத்து தொடர்பாக பட்டாசு ஆலையின் உரிமையாளர் மோகன் ராஜ் மற்றும் போர்மேன் செல்வராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.