![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/02/37120576-dura.webp)
சென்னை,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி விட்டது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்றிரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது.
முன்னதாக புனேயில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 4-வது போட்டியில் இந்திய வீரர் ஷிவம் துபே பேட்டிங் செய்கையில் கடைசி ஓவரில் ஜாமி ஓவர்டான் வீசிய பந்து ஹெல்மெட்டில் தாக்கியதால் பீல்டிங் செய்ய வரவில்லை. அவருக்கு பதிலாக மாற்று வீரராக களம் இறங்கிய வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா 3 விக்கெட் வீழ்த்தி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.
ராணா மாற்று வீரராக இறங்கியதற்கு இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் அந்த அணியின் முன்னாள் வீரர்களான குக், மைக்கேல் வாகன், கெவின் பீட்டர்சன் போன்றவர்களும் இந்த முடிவை விமர்சித்தனர்.
இந்நிலையில் இங்கிலாந்தினர் சொல்வது போல் துபேவுக்கு பதிலாக ஆல் ரவுண்டர் ரமன்தீப் சிங்தான் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று இந்திய முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "அந்தப் போட்டி முடிந்து விட்டது. இந்தியா சொந்த மண்ணில் மற்றுமொரு தொடரை வென்றது. ஆனால் அந்தப் போட்டி ஐ.பி.எல். தொடரில் இம்பேக்ட் வீரருடன் விளையாடியது போல் இருந்தது. துபேவுக்கு பதிலாக ராணா தேர்ந்தெடுக்கப்பட்டது மொத்தமாக விவாதத்தை எழுப்பியது. இது ஒரு சர்வதேச போட்டி, ஐ.பி.எல். இல்லை என்பதை நாம் மறந்துவிட்டோமா?.
கடந்த காலங்களில் ஜடேஜாவுக்கு பதில் கான்பெரா மைதானத்தில் மாற்று வீரராக சஹால் வந்தார். அப்போது ஸ்பின்னருக்கு பதில் ஸ்பின்னர் விளையாட வந்தார். இங்கே துபேவுக்கு பதில் ராணா விளையாடினார். ஒருவேளை துபேவுக்கு பதில் சரியான மாற்று வீரர் இல்லை என்று நீங்கள் சொல்லலாம். அது போன்ற சூழ்நிலையில் ரமன்தீப் சிங் வெளியே உட்கார்ந்திருந்தார்.
அதை செய்யாதது என்னால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. எனவே அது போட்டி நடுவர்களிடம் ஏற்பட்ட தவறான புரிதலாகும். உண்மையில் துபேவுக்கு பதிலாக ரமன்தீப் சிங் சரியான மாற்று வீரர். ஆனால் ஹர்ஷித் ராணா மாற்று வீரராக தேர்வு செய்யப்பட்டார். பொறுப்பில் இருப்பவர்கள் இதை நன்றாக கவனித்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்" என கூறினார்.