![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/13/39319122-musk33.webp)
வாஷிங்டன்,
உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும் டெஸ்லா கார் நிறுவனம் மற்றும் ஸ்பேஸ் - எக்ஸ் விண்வெளி ஆய்வு மைய நிறுவனருமான எலான் மஸ்க் உலகின் முன்னணி சமூக வலைத்தளமான டுவிட்டரைக் கடந்த 2022 ஆம் ஆண்டு விலைக்கு வாங்கினார். அதன்பிறகு அதற்கு எக்ஸ் என்று பெயர் மாற்றி தனது அதிரடி பதிவுகளால் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறார்.
இதனிடையே நடந்து முடிந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப்பிற்கு ஆதரவாக எக்ஸ் தளத்தில் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டார். கைமேல் பலனாக டிரம்ப்பும் அதிபர் தேர்தலில் கமலா ஹரிஸை தோற்கடித்து வெற்றிபெற்று நாட்டின் ஜனாதிபதியானார். இதனைத் தொடர்ந்து அமெரிக்க அரசின் செயல்திறன் துறை (DODGE) தலைவராக எலான் மஸ்க்கை டிரம்ப் நியமித்தார். இந்த குழு அரசின் தேவையற்ற செலவை கண்டுபிடித்து அதனை கட்டுப்படுத்தும் வேலையை செய்து வருகிறது.
இந்த நிலையில் அரசுத் துறையை ஒட்டுமொத்தமாக கலைத்துவிட்டு புதிதாக உருவாக்க வேண்டும் என்ற எலான் மஸ்க் கூறியுள்ளார். துபாயில் நடைபெற்ற உலக அரசுத்துறை தொடர்பான உச்சி மாநாட்டில் பேசிய எலான் மஸ்க், மக்களின் ஜனநாயக ஆட்சி முறைக்கு அரசுத் துறைகள் எதிராக இருக்கின்றன. அரசுத் துறைகளில் ஆட்களை நீக்குவதற்கு பதில் ஒட்டுமொத்தமாக கலைத்துவிட்டுச் சீரமைப்புகளுக்கு பின் அவற்றை புதிதாக உருவாக்கவேண்டும். வயல்களில் தேவையில்லாத கலைகளை வேரோடு அகற்ற வேண்டும். இல்லையென்றால் அது மீண்டும் மீண்டும் வளரக்கூடும். அதேபோன்று தான் அரசுத் துறையும் மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். ஏற்கனவே அமெரிக்க அரசுத் துறை ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு கொடுத்து அவர்களை எலான் மஸ்க் வெளியேற்றி வரும் நிலையில், எலான் மஸ்கின் இந்த கருத்து அரசு ஊழியர்களின் மத்தியில் கடும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.