புனே,
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது டி20 போட்டி புனேயில் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்த ஆட்டத்தில் இந்திய ஆல்-ரவுண்டர் ஷிவம் துபே பேட் செய்தபோது, கடைசி ஓவரில் ஒரு பவுன்சர் பந்து அவரது ஹெல்மெட்டை பலமாக தாக்கியது. இன்னிங்ஸ் முடிந்ததும் ஷிவம் துபேவை பரிசோதித்தபோது தலைக்குள் லேசாக அதிர்வு இருப்பதாக உணர்ந்தார். இத்தகைய காயத்துக்கு மாற்று வீரரை அனுமதிக்கலாம் என்ற விதிப்படி வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். அவர் லிவிங்ஸ்டன், பெத்தேல், ஓவர்டான் ஆகியோரது விக்கெட்டை வீழ்த்தி வெற்றிக்கு உதவினார்.
ஆனால் ஆல் ரவுண்டரான துபேவுக்கு பதில் முழுமையான பவுலரான ஹர்ஷித் ராணாவை இந்திய அணி விதிமுறையை மீறி விளையாட வைத்துள்ளதாக குக், மைக்கேல் வாகன், கெவின் பீட்டர்சன் போன்ற இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர். மேலும் இந்த முடிவை நாங்களும் ஏற்றுக் கொள்ளவில்லை என்று இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் போட்டியின் முடிவில் அதிருப்தியை வெளிப்படுத்தினார். இந்த விவகாரம் கிரிக்கெட் உலகில் பேசு பொருளானது.
இந்நிலையில் ஐ.சி.சி. விதிமுறைக்கு உட்பட்டுத்தான் தாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாக இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளர் மோர்னே மோர்கல் தெரிவித்துள்ளார். இதில் மேற்கொண்டு விவாதங்கள் இருந்தால் அதைப் போட்டி நடுவரிடம் கேட்குமாறு அவர் பதிலடி கொடுத்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "முதல் இன்னிங்ஸ் முடிவில் எங்களிடம் வந்த ஷிவம் துபே லேசான தலைவலி இருப்பது போல் உணர்வதாக தெரிவித்தார். எனவே அவருடைய பெயரை நாங்கள் போட்டி நடுவரிடம் எடுத்துச் சென்றோம். அங்கிருந்து எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளும் போட்டி நடுவரைப் பொறுத்தது. அந்த முடிவு எடுத்த போது ராணா இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
அவரைப் பார்த்த நாங்கள் விரைவாக தயாராகி பந்து வீச வருமாறு சொன்னோம். எனவே அந்த முடிவு எனக்கு மேலே அதிகாரம் கொண்ட போட்டி நடுவரிடமிருந்து எடுக்கப்பட்டது. நாங்கள் அவரிடம் மாற்று வீரரின் பெயரை மட்டுமே எடுத்துச் செல்ல முடியும். அங்கிருந்து எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளும் எங்களுடைய கைகளுக்கு அப்பாற்பட்டது" என்று கூறினார்.