புதுடெல்லி,
பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் நடந்து வரும் 3-வது ஆட்சியில் முழு அளவிலான மத்திய பட்ஜெட்டை மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். வரி குறைப்புக்கான நம்பிக்கை மற்றும் வளர்ச்சிக்கான தேவை ஆகியவற்றை சமஅளவில் உள்ளடக்கிய பட்ஜெட்டாக இது பார்க்கப்படுகிறது.
இந்த பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி உச்ச வரம்பில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. ஆண்டுக்கு வருவாய் ரூ.12 லட்சம் பெறுபவர்களுக்கு வருமான வரி இருக்காது என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், மாதத்திற்கு ரூ.1 லட்சம் வரை சம்பளம் பெறுபவர்கள் இனி வரி செலுத்த தேவை இருக்காது.
இந்த நிலையில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம் ஆகியவை குறித்து பேசவே இல்லை என காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் விமர்சித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், "தனிநபர் வருமான வரி உச்ச வரம்பில் மாற்றம் செய்யப்பட்டிருப்பது நல்ல விஷயமாக இருக்கலாம். உங்களுக்கு வருமானம் இருக்கும் பட்சத்தில் நீங்கள் குறைவாக வரி செலுத்துவீர்கள். ஆனால் வருமானம் இல்லாவிட்டால் என்ன நடக்கும்?
உங்கள் ஆண்டு வருமானம் ரூ.12 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால் நீங்கள் மகிழ்ச்சி அடையலாம். ஆனால் வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம் ஆகியவை குறித்து நிதி மந்திரி பேசவே இல்லை. இந்த வார்த்தைகளை கூட அவர் பயன்படுத்தவில்லை.
நீங்கள் பீகாரில் வசிப்பவராக இருந்தால், நீங்கள் ஆளுங்கட்சி கூட்டணியை சேர்ந்தவராக இருந்தால், தேர்தல்களில் உங்களுக்கு உதவக்கூடிய பலன்களைப் பெறுவீர்கள் என்பதில் சந்தேகமில்லை" என்று தெரிவித்தார்.