பெங்களூரு: துபாயில் இருந்து பெங்களூருவுக்கு 14.8 கிலோ தங்கம் கடத்தி வந்த தமிழ் நடிகை கைது செய்யப்பட்டார். கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் ரன்யா ராவ் (32). இவர் கன்னடம் மற்றும் தமிழ் சினிமாவில் நடிகையாக நடித்துள்ளார். கன்னட மொழியில் நடிகர் கிச்சா சுதீப்பின் மாணிக்யா என்ற படத்தில் நடிகையாக அறிமுகம் ஆனார். தமிழில் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியானா வாகா என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக ரன்யா ராவ் நடித்திருந்தார்.
இந்நிலையில், துபாயில் இருந்து பெங்களூருக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த நடிகை ரன்யா ராவ், தனது உடலில் அதிகப்படியான நகையை அணிந்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் அடைந்த வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவரது உடைமைகளை அதிகாரிகள் சோதனை நடத்தியதில் அளவுக்கு அதிகமாக தங்ககட்டிகள் மறைத்து கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
மொத்தம் 14.80 கிலோ தங்கத்தை நடிகை கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து அதை பறிமுதல் செய்த அதிகாரிகள் நடிகை ரன்யா ராவை கைது செய்து பெங்களூர் எச்பிஆர் லே-அவுட்டில் உள்ள வருவாய் புலனாய்வு இயக்குநர அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர். இந்த கடத்தல் பின்னணியில் இன்னும் சிலர் இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
* ஏடிஜிபியின் மகள்
கடந்த 15 நாட்களில் மட்டும் நடிகை ரன்யா ராவ் 4 முறை துபாய் சென்று வந்துள்ளார். இதனால் அவரது நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதை தொடர்ந்து, நேற்று துபாயில் இருந்து வந்த அவரிடம் அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர். நடிகை ரன்யா ராவின் தந்தை ஐ.பி.எஸ். அதிகாரி என்றும், அவர் கர்நாடகாவில் ஏ.டி.ஜி.பி.யாக பணியாற்றி வருகிறார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
The post துபாயில் இருந்து பெங்களூருவுக்கு 14.8 கிலோ தங்கம் கடத்திய தமிழ் நடிகை அதிரடி கைது: ஏர்போர்ட்டில் சிக்கினார் appeared first on Dinakaran.