துன்பம் நீங்கி இன்பம் பெருகட்டும் - ஓ.பன்னீர்செல்வம் தீபாவளி வாழ்த்து

2 months ago 13

சென்னை,

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:-

"தீபங்களின் வரிசை" என்றழைக்கப்படும் தீபாவளித் திருநாளை உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் எனது அருமை தமிழக மக்களுக்கு நெஞ்சம் நிறைந்த தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகளை மட்டற்ற மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்களுக்கு கொடுமைகளை இழைத்துக் கொண்டிருந்த நரகாசுரன் என்னும் கொடிய அரக்கனை திருமால், அன்னை மகாலட்சுமியின் துணையுடன் அழித்த தினமே தீபாவளி. தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகும் இந்நன்னாளில், மக்கள் புத்தாடைகளை அணிந்து, இறைவனை வழிபட்டு, இல்லந்தோறும் மகிழ்ச்சி பொங்க இனிப்புகளை பரிமாறி, பட்டாசுகளை வெடித்து உறவினர்களுடனும், நண்பர்களுடனும் கொண்டாடி மகிழ்வார்கள்.

உலகில் மண்டிக் கிடக்கும் இருளை மக்கள் ஏற்றி வைக்கும் தீப ஒளி அழித்து விடுவதுபோல், மானிடர்கள் உள்ளத்தில் சூழ்ந்திருக்கும் அறியாமையாகிய இருளை அழித்து அறிவொளி ஏற்ற வேண்டும் என்பதே தீபாவளித் திருநாளின் தத்துவம். இதற்கேற்ப, அனைவர் உள்ளங்களிலும் அறியாமை அகன்று அறிவொளி ஏற்பட்டு, அவர்களின் வாழ்வு இன்ப ஒளி நிறைந்ததாக விளங்க வேண்டுமென்ற என்னுடைய அவாவினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தத் தீபத் திருநாளில், இறைவனின் அருளால் ஆணவம், அகங்காரம், இரக்கமின்மை, சினம் ஆகியவை அகன்று, தர்மம், ஈகை, மனித நேயம், செய்நன்றி அறிதல் ஆகியவை தழைத்தோங்கட்டும்; துன்பம் நீங்கி இன்பம் பெருகட்டும்; இந்த இன்பம் என்றும் நிலைத்து நிற்கட்டும் என வாழ்த்தி, அனைவருக்கும் எனது இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Read Entire Article