திருச்சி: தமிழக துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் திருச்சி, புதுக்கோட்டை, கரூர் மாவட்டங்களில் 3 நாள் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதற்காக சென்னையிலிருந்து இன்று (23ம்தேதி) மாலை 5.45 மணியளவில் விமானம் மூலம் திருச்சி வருகிறார். அங்கு அவருக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். பின்னர் 6 மணிக்கு ஒத்தக்கடையில் அமைந்துள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் உதயநிதி, இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை செல்கிறார். வழியில் புதுக்கோட்டையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் இரவு கந்தர்வகோட்டை அடுத்த மங்களாக்கோவிலில் மாநில அளவிலான கபடி போட்டியை தொடங்கி வைக்கிறார்.
நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு இரவு புதுக்கோட்டை வரும் துணை முதல்வர் அங்குள்ள ஏஎன்எஸ் பிரைட் ஓட்டலில் தங்குகிறார். நாளை (24ம்தேதி) காலை 10 மணிக்கு புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் அரசு திட்ட பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்கிறார். காலை 11.30 மணிக்கு அங்கு வீட்டுமனைப்பட்டா மற்றும் கலைஞர் கனவு இல்லம் திட்ட அரசாணையை பயனாளிகளுக்கு வழங்குகிறார். மதியம் 12.30 மணிக்கு மாலையீடு கற்பக விநாயகா திருமண மண்டபத்தில் நடைபெறும் புதுக்கோட்டை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் அறிமுகக் கூட்டத்தில் பங்கேற்கிறார். பின்னர் புதுக்கோட்டை ஏஎன்எஸ் பிரைட் ஓட்டலுக்கு வரும் உதயநிதி, மாலை 4 மணிக்கு அங்குள்ள மின் ஹாலில் மிசா துரை மாணிக்கம் படத்தை திறந்து வைக்கிறார். மாலை 4.30 மணிக்கு புதுக்கோட்டை 9ஏ, நத்தம் பண்ணையில் மகளிர் சுய உதவிக் குழுவினரை சந்தித்து பேசுகிறார்.
5.30 மணிக்கு பள்ளத்துவயலில் கட்சி மருத்துவ அணி மாநில கருத்தரங்கில் பங்கேற்கிறார். மாலை 6.30 மணிக்கு இளையாவயல் அடுத்த கல்லுக்குமியல்பட்டியில் நடைபெறும் நிகழ்ச்சியில் திருநங்கைகளுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்குகிறார். இரவு திருச்சி வரும் உதயநிதி கோர்ட் யார்டு ஓட்டலில் தங்குகிறார். நாளை மறுநாள் காலை கோர்ட் யார்டு ஹோட்டலில் திமுக இளைஞர் அணி மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கிறார். பின்னர் கரூர் செல்லும் உதயநிதி வேலாயுதம்பாளையம் காமாட்சி மகாலில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
The post துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை திருச்சி பயணம் appeared first on Dinakaran.