
புதுடெல்லி,
துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கருக்கு கடந்த 9-ந்தேதி அதிகாலை 2 மணியளவில் திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து, அவரது குடும்பத்தினர் அவரை உடனடியாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு 73 வயதான ஜெகதீப் தன்கரை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். பிரதமர் மோடி, மத்திய சுகாதாரத்துறை மந்திரியும், பா.ஜனதா தேசிய தலைவருமான ஜே.பி.நட்டா ஆகியோர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று, ஜெகதீப் தன்கரிடம் நலம் விசாரித்தனர்.
இந்த நிலையில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் தற்போது குணமடைந்ததை தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அடுத்த சில நாட்களுக்கு ஓய்வு எடுக்குமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.