ரெயில்வே திட்டங்களுக்கு நிலம்: தமிழ்நாடு அரசு விளக்கம்

3 hours ago 1

சென்னை,

தமிழ்நாட்டில் ரெயில்வே திட்டங்களுக்குத் தேவையான நிலங்கள் விரைந்து கையகப்படுத்தப்பட்டு வழங்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் மத்திய அரசிலால் செயல்படுத்தப்பட்டு வரும் ரெயில்வே திட்டங்களுக்குத் தேவையான நிலங்களை நில எடுப்பு செய்வதில் மாநில அரசு காலதாமதம் செய்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை அவர்கள் தெரிவித்துள்ளதாக சில நாளிதழ்களில் செய்தி வெளியாகி உள்ளது தொடர்பாக கீழ்கண்ட விபரங்கள் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2021-மே மாதம் முதல் தமிழ்நாட்டில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட ரெயில்வே திட்டங்களின் முக்கியத்துவத்தை கருத்திற்கொண்டு பல ஆண்டுகளாக நிலுவையிலிருந்த ரெயில்வே திட்டங்களுக்கான நில எடுப்பு பணிகளின் மீது தனிக்கவனம் செலுத்தி விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ரெயில்வே திட்டங்களுக்காக மாநிலம் முழுவதும் கையகப்படுத்தப்படும் நிலங்களின் விவரங்கள்.

தமிழ்நாட்டில் மத்திய அரசின் ரெயில்வே திட்டங்களுக்கு மொத்தமாக 2197.02 ஹெக்டேர் நிலங்களை நில எடுப்பு செய்ய ஏற்கனவே தமிழ்நாடு அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் முக்கியமான 17 ரெயில்வே திட்டங்களுக்கு நில எடுப்பு செய்யப்பட வேண்டிய 1253.11 ஹெக் நிலங்களில், 1144.84 ஹெக்டேர் நிலங்களுக்கான நில எடுப்புப் பணிகள் முடிவுற்று (அதாவது 91% சதவீதம்) நிலம் ரெயில்வே நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் குறிப்பாக முக்கியத் திட்டங்களான திண்டிவனம்-நகரி அகல ரெயில்பாதை (100%), மதுரை-தூத்துக்குடி அகல ரெயில்பாதை (100%), மணியாச்சி-நாகர்கோவில் அகல ரெயில்பாதை (97%), கன்னியாகுமரி-நாகர்கோவில் அலை ரெயில் பாதை இரட்டிப்பாக்குதல் (100%), தூத்துக்குடி-மதுரை (அருப்புக்கோட்டை வழி) புதிய அகல இரயில் பாதை கட்டம்1 (100%), சின்னசேலம்-கள்ளக்குறிச்சி புதிய அகல ரெயில்பாதை (98%), கொருக்குப்பேட்டை-எண்ணூர் நான்காவது வழித்தடம் (100%) மயிலாடுதுறை-திருவாரூர் அகல ரெயில்பாதை (100%), பட்டுக்கோட்டை நான்குமுனை சந்திப்பு (100%), புதிய அகல ரெயில் பாதை (சேலம் கரூர் வழித்தடம் உருவாக்குதல்) (100%). மன்னார்குடி- நீடாமங்கலம் அகல ரெயில்பாதை (100%), சென்னை கடற்கரை-கொருக்குப்பேட்டை மூன்றாவது நான்காவது வழித்தடம் (100%), மற்றும் விழுப்புரம்--திண்டுக்கல் அகல ரெயில்பாதை (100%) ஆகிய திட்டங்களுக்கு மேலே குறிப்பிட்டுள்ளவாறு 97% முதல் 100% வரை நில எடுப்புப் பணிகள் முடிக்கப்பட்டு மத்திய ரெயில்வே நிர்வாகத்திடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. எஞ்சிய நில எடுப்புப் பணிகளை விரைந்து முடிக்க முழுவீச்சில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ரெயில்வே துறையால் எடுக்கவேண்டிய நடவடிக்கையால் நிலுவையிலுள்ள இடங்கள்

திருவண்ணாமலை-திண்டிவனம் புதிய அகல ரெயில்பாதை திட்டத்திற்கு 229.23 ஹெக்டேர் நிலங்களை நில எடுப்பு செய்ய 2011 ஆம் ஆண்டில் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டும் ரெயில்வே துறையினரால் நில எடுப்பிற்கு நிதி ஒதுக்கப்படாததால் நில எடுப்புப் பணிகள் அனைத்தும் முற்றிலும் முடங்கி உள்ளன.

அத்திப்பட்டு புத்தூர் இடையிலான ரெயில்வே தடத்திற்கு இதுவரை ரெயில்வே துறையினரால் நிலத் திட்ட அட்டவணை (LP.S) சமர்ப்பிக்கப்படவில்லை மற்றும் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article