தீவிரவாதிகள் தாக்குதலால் மணிப்பூரில் மீண்டும் ஏற்பட்ட வன்முறை

3 weeks ago 8

இம்பால்,

மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் குகி மற்றும் மெய்தி இன மக்களிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக உருமாறியது. ஓராண்டுக்கு மேலாக நீடித்து வரும் இந்த கலவரத்தில் வன்முறையை வேரறுக்க ராணுவத்தினர் களம் இறக்கப்பட்டனர். இருப்பினும் கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.

இந்த மோதலில் சிறுவர்கள், பெண்கள் உள்பட ஏராளமானவர்கள் உயிர் இழந்தனர். கலவரத்தில் துப்பாக்கிகள், வெடிகுண்டுகளை தாண்டி டிரோன்கள், ராக்கெட் லாஞ்சர்கள் ஆகியவை பயன்படுத்தப்படுவதால் வன்முறையின் தீவிரம் குறைந்தபாடில்லாமல் நீடித்து வருகிறது.

இந்தநிலையில் அங்குள்ள ஜிரிபம் மாவட்டம் போரோபெக்ரா கிராமத்திற்குள் போராட்டக்குழுவினர் பயங்கர ஆயுதங்களுடன் நள்ளிரவு ஊடுருவினர். கிராமத்தில் உள்ள வீடுகள், குடிசைகளுக்கு தீ வைத்தப்படி போலீஸ் நிலையத்தை சுற்றி வளைத்தனர். பின்னர் போலீஸ்நிலையம் மீது வெடிகுண்டுகளை வீசியெறிந்து தாக்குதல் நடத்தினர். சுதாரித்து கொண்ட போலீசார் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி பதிலடி தாக்குதல் கொடுத்தனர். நீண்ட நேரம் நீடித்த இந்த போராட்டத்தில் உயிரிழப்பு குறித்தான தகவல்கள் வெளியாகவில்லை.

முன்னதாக அங்குள்ள தனியார் உயர்நிலைப்பள்ளி மீது போராட்டக்குழுவினர் தீ வைத்தனர். காற்றின் வேகம் காரணமாக மளமளவென அந்த கட்டிடம் முழுவதும் தீப்பிடித்து எரிய தொடங்கியது. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பள்ளிக்கூடத்தில் பரவி இருந்த தீயை போராடி அணைத்து கட்டுப்படுத்தினர். இந்த சம்பவத்தில் கல்வி உபகரணங்கள் உள்பட பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. இதனை தொடர்ந்து கிழக்கு இம்பால் நகரில் போராட்டக்குழுவை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டநிலையில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மணிப்பூரின் மெய்தி மற்றும் குக்கி சமூகங்களுக்கு இடையே நடந்து வரும் மோதலுக்கு அமைதி தீர்வு காணும் நோக்கில் இரு தரப்பு சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் டெல்லியில் நடைபெற்றது. இந்த சூழலில் இந்த வன்முறை சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Read Entire Article