திருபுவனை : ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதலை தொடர்ந்து நாடு முழுவதும் 259 இடங்களில் போர்க்கால ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள காவல் நிலையங்களில் இதே போல் ஒத்திகை நிகழ்ச்சிக்கு காவல்துறை ஏற்பாடு சார்பில் செய்யப்பட்டது.
புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன், சட்டம் ஒழுங்கு சீனியர் எஸ்பி கலைவாணன், போக்குவரத்து சீனியர் எஸ்பி பிரவீன் குமார் திரிபாதி ஆகியோரின் வழிகாட்டுதலின்படி திருபுவனை மேம்பாலம் அருகில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினால் அதனை பாதுகாப்பாக எப்படி கையாள வேண்டும் என்று போலீசார் நடித்து காட்டினார்கள்.
இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் திருபுவனை இன்ஸ்பெக்டர் கீர்த்திவர்மன், சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் 20க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர். ஒத்திகை நிகழ்ச்சியில் மூன்று தீவிரவாதிகள் பொதுமக்களை பார்த்து சுட்டனர். அதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஒருவர் படுகாயம் அடைந்து தரையில் கிடந்தார்.
இதனைத் தொடர்ந்து போலீசார் எதிர் தாக்குதல் நடத்தியதில் மூன்று தீவிரவாதிகளில் ஒரு தீவிரவாதியை சுட்டுக்கொன்றனர். மீதி இரண்டு தீவிரவாதிகளை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்து விசாரணைக்கு கொண்டு சென்றனர். மேலும் இறந்து போன தீவிரவாதியை தயார் நிலையில் வைக்கப்பட்ட ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
தீவிரவாத தாக்குதலில் இறந்து போன ஒருவரையும், காயமடைந்த இன்னொருவரையும் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். திடீரென பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றதால் திருபுவனை கடை வீதிக்கு பொருட்களை வாங்க வந்த பொதுமக்கள் பதறி அடித்து ஓடினார்கள்.
இந்த சம்பவத்தால் திருபுவனை நான்கு முனை சந்திப்பில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதன் பின்னர், திருபுவனை போலீசார் போக்குவரத்தினை சரி செய்தனர்.
The post தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க ஒத்திகை நிகழ்ச்சி appeared first on Dinakaran.