தீபாவளியை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸ் சிறப்பு விற்பனை: கலெக்டர் தொடங்கி வைத்தார்

3 months ago 21

செங்கல்பட்டு: செங்கல்பட்டு கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனையினை மாவட்ட கலொக்டர் அருண்ராஜ் தொடங்கி வைத்தார். தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 89 ஆண்டுகளாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழக நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் ரகங்களை கொள்முதல் செய்து இந்தியா முழுவதும் உள்ள 150 கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக சந்தைப்படுத்தி நெசவாளர்களுக்கு பேருதவி அளித்து வருகிறது.

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் பாரம்பரியமிக்க பட்டு கூட்டுறவு சங்கங்கள் மூலமாக காஞ்சிபுரம், சேலம், கோவை, ஆரணி, தஞ்சை ஆகிய இடங்களிலிருந்து உற்பத்தி செய்யப்பட்ட பட்டுச்சேலைகளை கொள்முதல் செய்து விற்பனை செய்வதன் மூலம் வாடிக்கையாளர்களின் பெரும் நன்மதிப்பையும் வரவேற்பையும் பெற்றுள்ளது. இளம் தலைமுறையினர் விரும்பும் வண்ணம் காலத்திற்கேற்ப புதிய வடிவமைப்புள்ள மென்பட்டு சேலைகளையும் அறிமுகப்படுத்தி வருகிறது.

பல்வேறு அரசு, தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் வசதிக்காக அவர்களின் நிறுவனத்திற்கே நேரிடையாக சென்று வளாக விற்பனையும் செய்து வருகிறது. மேலும், மாதாந்திர சேமிப்பு திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் 11 மாத சந்தா தொகையை மட்டுமே செலுத்தி 12வது மாத சந்தா தொகையை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனமே செலுத்துவதால் இதன் மூலம் வாடிக்கையாளர்கள் 30% தள்ளுபடியை ஆண்டு முழுவதும் பெற்று கூடுதல் பலன் அடைவதுடன் வாடிக்கையாளர்கள் இத்திட்டத்தில் ஆர்வமுடன் சேர்ந்து பலனடைந்தும் வருகின்றனர்.தீபாவளி 2024 பண்டிகைகால விற்பனைக்காக கோ-ஆப்டெக்ஸ் பட்டு, பருத்தி இரகங்கள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டிகள், லுங்கிகள், துண்டு ரகங்கள், மகளிர் விரும்பும் சுடிதார் ரகங்கள், ஆர்கானிக் பருத்தி ரகங்கள் மற்றும் ஏற்றுமதி ரகங்கள் ஆகியவை விற்பனைக்காக பெருமளவு தருவிக்கப்பட்டுள்ளன.

தற்போது, தீபாவளி 2024 பண்டிகை கால விற்பனை 15.9.2024 முதல் 30.11.2024 வரை 30% தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு தீபாவளி 2024 சிறப்பு தள்ளுபடி விற்பனையை செங்கல்பட்டு கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் மாவட்ட கலெக்டர் அருண்ராஜ், குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.செங்கல்பட்டு கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்திற்கு தீபாவளி 2024 விற்பனை குறியீடாக ₹1 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்ட மக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திட கோ-ஆப்டெக்ஸ் துணிகளை கொள்முதல் செய்து தீபாவளி பண்டிகையை சிறப்புடன் கொண்டாடிட மாவட்ட கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்நிகழ்ச்சியில் சென்னை முதுநிலை மண்டல மேலாளர் க.அருள்ராஜன், செங்கல்பட்டு வட்டாட்சியர் பூங்குழலி, செங்கல்பட்டு விற்பனை நிலைய மேலாளர், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post தீபாவளியை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸ் சிறப்பு விற்பனை: கலெக்டர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Read Entire Article